ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

108

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

இந்தியாவிலிருந்து வெளியேறும் டேவிட் வோர்னர்!

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A அணி மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

முன்னதாக இரு அணிகளும் உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்த நிலையில் தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து வீரர்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் போனதுடன் அவர்கள் 45 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 166 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.

இங்கிலாந்து லயன்ஸ் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜெகோப் பெதேல் 67 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் இலங்கை A அணியின் பந்துவீச்சிற்காக இசித விஜேசுந்தர மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். இவர்கள் ஒரு புறமிருக்க சுமிந்த லக்ஷானும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை நிரூபித்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 167 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை A கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டியதோடு ஒரு கட்டத்தில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது.

தென்னாபிரிக்க தொடருக்கான மே.தீவுகள் ஒருநாள், T20i குழாம்கள் அறிவிப்பு

இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் ஆடத் தொடங்கிய நிப்புன் தனன்ஞய நிதானமான ஆட்டம் மூலம் இலங்கை A கிரிக்கெட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய நிப்புன் தனன்ஞய இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 74 பந்துகளில் 04 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் மேஷன் கிரேன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<