உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்

217

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் வீரர்கள் சாதாரண உயரத்தில் இருப்பதுவே வழக்கம். ஆனால், இதற்கு மாற்றமாக அதிக உயரத்துடன் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

>> கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார

இவ்வாறு அதிக உயரத்துடன் கிரிக்கெட் உலகினை மிரட்டிய வீரர்கள் சிலர் பற்றிப் பார்ப்போம்.  

மிச்சல் ஸ்டார்க் 

  • உயரம் – 6 அடி 6 அங்குலம் (1.96 மீற்றர்) 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் மிச்செல் ஸ்டார்க் தற்போதைய கிரிக்கெட் உலகு கண்ட உயரமான வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். இவரின் உயரம் 6 அடி 6 அங்குலம் (1.96 மீற்றர்) ஆகும். 

கடந்த 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்ற சந்தர்ப்பத்தில், குறித்த உலகக் கிண்ணத்தின் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக் கொண்ட ஸ்டார்க் துடுப்பாட்டவீரர்களுக்கு தனது மின்னல் வேகம் மூலம் எப்போதும் அழுத்தம் உருவாக்கும் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

>> தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன

ஜேசன் ஹோல்டர் 

  • உயரம் – 6 அடி 6 அங்குலம் (1.98 மீற்றர்)

மேற்கிந்திய தீவுகள் அணியினை மிகவும் இளவயதில் (23 வயது, 72 நாட்கள்) ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வழிநடாத்திய வீரர் என்கிற சாதனையை சகலதுறைவீரரான ஜேசன் ஹோல்டர் செய்திருக்கின்றார். ஹோல்டரும் தற்போதைய கிரிக்கெட் உலகில் வலம் வரும் அதிக உயரம் கொண்ட வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். இவரது உயரம் 6 அடி 6 அங்குலமாகும். 

தனது 21ஆவது வயதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்ற ஹோல்டர் தனது உயரத்தின் துணையுடன், சிறந்த பௌன்சர் பந்துகளை வீசும் ஆற்றல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், துடுப்பாட்டத்திலும் அசத்தும் ஹோல்டர் கடந்த 2019ஆம் ஆண்டு ஐ.சி.சி. இன் டெஸ்ட் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேர்ட்லி அம்ப்ரோஸ்

Courtesy – Getty Images
  • உயரம் – 6 அடி 8 அங்குலம் (2.03 மீற்றர்) 

ஹோல்டர் போன்று மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றுமொரு வீரரான கேர்ட்லி அம்ப்ரோஸ் உம், தனது உயரத்தின் மூலம் பிரபல்யமடைந்த வீரர். சுமார் 6 அடி 8 அங்குலம் (2.03 மீற்றர்) உயரம் கொண்டிருக்கும் அம்ப்ரோஸ் 90களில் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் உலகை ஆக்கிரமிக்க, வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக பங்களிப்புச் செய்திருக்கின்றார். 

சிறுவயதில் தனது அதிக உயரம் காரணமாக கூடைப்பந்து விளையாட்டினையே தெரிவு செய்த அம்ப்ரோஸ், பின்னரே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாறியிருக்கின்றார். 

தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறும் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 20.99 என்கிற சராசரியுடன் 405 டெஸ்ட் விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்கும் அம்ப்ரோஸ் ஒருநாள் போட்டிகளில் 225 விக்கெட்டுக்களை சுருட்டியிருக்கின்றார். 

இதோடு, அம்ப்ரோஸ் கிரிக்கெட் உலகு இனம்கண்ட சிறந்த வேகப்பந்துவீச்சாளராகவும் வாழ்நாள் சாதனை ஒன்றை செய்திருபபது குறிப்பிடத்தக்கது. 

>> இலங்கை அணி பரிசளித்த மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகள்

ஜோயல் கார்னர்

Courtesy – West Indies Cricket Board
  • உயரம் – 6 அடி 8 அங்குலம் (2.03 மீற்றர்)

ஐ.சி.சி. இன் வரலாற்று நாயகர்கள் (ICC Cricket Hall of Fame) விருதினை வென்றிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜோயல் கார்னர், 80களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். ஜோயல் கார்னரின் உயரம் 6 அடி 8 அங்குலமாகும். ஜோயல் தனது உயரத்தின் மூலம் “பெரிய பறவை (Big Bird)” என அழைக்கப்பட்டு வருவதோடு, தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அதிக உயரம் கொண்ட வீரராகவும் சாதனை படைத்தார்.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 156 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோயல் கார்னர், 405 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றார். இன்னும், ஒருநாள் போட்டிகளில் அதிக தரநிலைப் புள்ளிகளை பெற்ற பந்துவீச்சாளராகவும் ஜோயல் கார்னர் சாதனை படைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ப்ரூஸ் ரெயிட்

Courtesy – AFP
  • உயரம் – 6 அடி 8 அங்குலம் (2.03 மீற்றர்) 

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோயல் கார்னரிற்கு சமமான உயரத்தினை கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ப்ரூஸ் ரெயிட் உம், கிரிக்கெட் உலகு கண்ட அதிக உயரம் கொண்ட வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். 

கடந்த 1985ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்காக, இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச அறிமுகத்தினைப் பெற்ற ப்ரூஸ் ரெயிட் தனது நாட்டுக்காக 113 டெஸ்ட் விக்கெட்டுக்களையும், 63 ஒருநாள் விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார்.  

இதேநேரம், ப்ரூஸ் ரெயிட் ஜோயல் கார்னரின் ஓய்விற்குப் பின்னர் கிரிக்கெட் உலகில் இருந்த அதிக உயரமான வீரராகவும் காணப்படுகின்றார். 

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக் கொண்ட ப்ரூஸ் ரெயிட் பயிற்சியாளராக தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மொஹமட் இர்பான்

    Courtesy – Getty Images
  • உயரம் – 7 அடி 1 அங்குலம் (2.16 மீற்றர்)  

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் இர்பானே, கிரிக்கெட் உலகு இதுவரையில் கண்ட உயரமான வீரராக காணப்படுகின்றார்.  இர்பானின் உயரம் 7 அடி 1 அங்குலம் (2.16 மீற்றர்) என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. 

பாகிஸ்தானின் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் திறமை காட்டியதன் மூலம், பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டில் விளையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்ற இர்பான், இதுவரை தனது தாயகத்திற்காக 86 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் உருவாகிய சூதாட்ட சர்ச்சை ஒன்றில் சிக்கிய மொஹமட் இர்பான், குறித்த சர்ச்சை காரணமாக அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடையினைப் பெற்றிருந்தார். எனினும், தற்போது குறித்த தடை நீங்கியிருக்கும் நிலையில், இர்பான் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<