டேவிட் மில்லரின் அதிரடியான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்கா முதல் T20யில் வெற்றி

2929
Miller powers SA to victory in 10-over thrash Tamil
 

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 3 T20 போட்டிகளை கொண்ட தொடரில், முதலாவது T20 போட்டி நேற்று வெள்ளிக்கிழமை (20) செஞ்சுரியன், சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக 10 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட இப்போட்டியில், தென்னாபிரிக்க அணியின் புதிய அணித் தலைவர் பர்ஹான் பெஹர்டீனின் தலைமையிலான தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகியே போட்டி ஆரம்பித்ததுடன், குறித்த போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்கா அணி சார்பாக ஐந்து புதிய வீரர்களும், இலங்கை அணி சார்பில் ஒரு வீரரும் இன்றைய போட்டியில் அறிமுகமாயினர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹைனோ குன் 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை நுவன் குலசேகரவின் பந்து வீச்சில் LBW முறையில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அத்துடன், இந்த போட்டியில் அறிமுகமாகிய புதிய வீரர்  ஜோன்–ஜோன் ஸ்மட்ஸ் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸ்சர் என 8 பந்துகளில் 13 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாமலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

டேவிட் மில்லர் மற்றும் பர்ஹான் பெஹர்டீன் நான்கவது விக்கெட்டுக்காக 27 பந்துககளில் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று தென்னாபிரிக்க அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற வழிவகுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பாக டேவிட் மில்லர் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களையும் நான்கவது விக்கெட்டுக்காக களமிறங்கிய பர்ஹான் பெஹார்டீன் 18 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் களமிறங்கினர். இலங்கை அணிக்காக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா முதல் விக்கெட்டுக்காக 5.1 ஓவர்களில் 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.

அதிரடியாக துடுப்பாடிய திக்வெல்ல 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 19 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த போட்டியில் புதுமுக வீரராக அறிமுகமாகிய திக்ஷில டி சில்வா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏரோன் பன்கிசோ வீசிய முதல் பந்திலேயே ஹைனோ குன்னிடம் பிடி கொடுத்து ஓட்டமெதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார்.

இறுதியில் மூன்று ஓவர்களுக்கு 40 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் புதிய பந்து வீச்சாளார் லுங்கி நிகிடி அனைவரையும் கவரும் வகையில் அவரது இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தார். அத்துடன் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அறிமுக போட்டியிலேயே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் தோல்வியுடன், இலங்கை அணி இது வரை 7  T20 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி ஜனவரி மாதம் 22ஆம் திகதி ஜோகனஸ்பேர்க், நியூ வாண்டரஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரை தக்க வைக்க வேண்டுமாயின் இலங்கை அணி கட்டாயமாக அந்த போட்டியில் வெற்றி பெற்றாகவேண்டிய நிலையில் களமிறங்கவுள்ளது.

ஸ்கோர் விபரம்

தென்னாபிரிக்கா

Score SAஇலங்கைScore SL