மொஹமட் இக்ரமின் அசத்தல் பந்து வீச்சால் ஹட்டன் நெஷனல் வங்கி இலகு வெற்றி

340

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும், வர்த்தக நிறுவனங்களுக்கான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings) அணிகள் வெற்றிகளை தக்கவைத்துள்ளன.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற  CDB வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஜோன் கீல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற யுனிலிவர் ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

>> விறுவிறுப்பான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி

ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) எதிர் யுனிலிவர் ஸ்ரீலங்கா

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மொஹமட் இக்ரமின் அசத்தலான பந்து வீச்சின் உதவியுடன் ஹட்டன் நெஷனல் வங்கி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹட்டன் நெஷனல் வங்கி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய யுனிலிவர் அணிக்கு கடும் சவாலைக் கொடுத்த ஹட்டன் நெஷனல் வங்கி அணி, எதிரணியை வெறும் 96 ஓட்டங்களுக்கு சுருட்டியது.

யுனிலிவர் ஸ்ரீலங்கா அணி் சார்பில் அதிகபட்சமாக அசங்க சில்வா 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஹட்டன் நெஷனல் வங்கி சார்பில் அபாரமாக பந்து வீசிய மொஹமட் இக்ரம் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருடன் இணைந்து சஜீவ வீரகோன் மற்றும் மாதவ வர்ணபுர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹட்டன் நெஷனல் வங்கி அணி 19.2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி, 99 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. அந்த அணி சார்பில் சவன் பிரபாஷ் 58 ஓட்டங்களையும், தேஷான் டயஸ் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹட்டன் நெஷனல் வங்கி அணி வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

யுனிலிவர் ஸ்ரீலங்கா – 96 (32) – அசங்க சில்வா 33, மொஹமட் இக்ரம் 45/5, சஜீவ வீரகோன் 8/2

ஹட்டன் நெஷனல் வங்கி – 99/0 (19.2) – சவன் பிரபாஷ் 58*, தேஷான் டயஸ் 40*

முடிவு –  ஹட்டன் நெஷனல் வங்கி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் சி.டி.பி (CDB)

கொழும்பு BRC மைதானாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குறைந்த ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது.

>> இரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற CDB அணி முதலில் துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பில் சதுரங்க மதவன்ச 42 ஓட்டங்களையும், சாலுக சில்வா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சஷ்ரிகே புஸ்ஸேகொல்ல 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி, வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்ட போதும், விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது. எனினும் அஷான் பீரிஸின் துடுப்பாட்டம் ஜோன் கீல்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

ஜோன் கீல்ஸ் அணி 29.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அஷான் பீரிஸ் 39 ஓட்டங்களையும், மாலிங்க அமரசிங்க 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற, மதுஷான் ரவிச்சந்திரகுமார 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

சி.டி.பி (CDB) – 133 (34.3) – சதுரங்க மதவன்ச 42, ஷாலுக சில்வா 24*, சஷ்ரிகே புஸ்ஸெகொல்ல 25/4

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 134/7 (29.5) – அஷான் பீரிஸ் 39, மாலிங்க அமரசிங்க 30, மதுஷான் ரவிச்சந்திரகுமார 34/3

முடிவு – ஜோன் கீல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<