எந்த வகையிலான சவால்களையும் எதிர்கொள்ள தயராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

844

இலங்கை அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்று அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இத்தொடரை நடாத்துகின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கு (CWI) நிதிப்பற்றாக்குறை உருவாகியிருக்கின்ற காரணத்தினால் இந்த சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை வர்த்தக ரீதியில் இலாபம் தரும் ஒரு நாள் போட்டித் தொடராக நடாத்த தற்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் விளையாட பூரண உடற்தகுதியினை நிரூபித்திருக்கும் இலங்கை அணியின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், இலங்கையின் மேற்கிந்திய சுற்றுப் பயணத்தின் போது எவ்வகையான போட்டிகள் வந்தாலும் அதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயராகவிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

>> பூரண உடல் தகுதியை நிரூபித்துள்ள மெதிவ்ஸ், லக்மால்

இந்த சுற்றுப் பயணத்திற்கு தயராகும் விதமாக கண்டியில் இடம்பெற்ற எட்டு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்றிருக்கும் இலங்கை அணி அடுத்த வாரம் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகின்றது.

“இந்த பயிற்சி முகாம் மிகவும் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும், தனித்துவமானதாகவும் அமைந்தது. இங்கு வீரர்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. நாங்கள் எங்களது உடற்தகுதிகளையும் இங்கே வளர்த்துக் கொண்டதோடு, (கிரிக்கெட் விளையாட்டின்) மூன்று பகுதிகளுக்காகவும் பயிற்சி எடுத்துக் கொண்டோம்“ என கண்டியில் நடைபெற்று முடிந்த பயிற்சி முகாம் பற்றி அஞ்செலோ மெதிவ்ஸ் கிரிக்பஸ் (Cricbuzz) செய்தி சேவைக்கு கூறியிருந்தார்.

இந்த முகாமில் இலங்கை அணி வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சிமிக்க சில நிபுணர்கள் அழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அப்படியான நிபுணர்களாக பீட்டர் ஸ்லீப் (சுழற்பந்து பயிற்சியாளர்), டிம் மெக்கெஸ்கில் (வேகப்பந்து பயிற்சியாளர்) மற்றும் கலாநிதி. பில் ஜோன்சி (உளவியலாளர்) போன்றவர்களை குறிப்பிட முடியும். இந்த  நிபுணர்கள் பற்றி பேசியிருந்த மெதிவ்ஸ், “அவர்கள் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து அதிகமாக வேலை செய்திருந்தனர். இவர்கள் தவிர ஏனைய உதவியாளர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இந்த பயிற்சி முகாம் மிகவும் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால், நாமும் அதிகமான விடயங்களை உள்வாங்கியிருக்கின்றோம். மழை காரணமாக எங்களுக்கு மின் விளக்குகளின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் போயிருந்தது. அது மட்டுமே கவலையான விடயம். மற்றைய அனைத்தும் சிறப்பாக இடம்பெற்றன“ எனத் தெரிவித்திருந்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளில் விளையாடியிருந்த அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் அங்கே டெஸ்ட் போட்டிகளில் எதிலும் அவர் விளையாடியிருக்கவில்லை. இது பற்றி பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“நான் ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளில் விளையாடியதை மிகவும் ரசித்திருக்கின்றேன். ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் நான் அங்கு விளையாடுவது இதுவே முதல் தடவை. நான் அதனை மிகவும்  எதிர்பார்த்திருக்கின்றேன். அங்கிருக்கும் மக்கள் நட்புறவுடன் பழகக் கூடியவர்கள் என்பதோடு கிரிக்கெட்டையும் விரும்பக்கூடியவர்கள்“

>> மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஒன்றினை முதல் தடவையாக வென்ற போது, இலங்கையின் அணித்தலைவராக மெதிவ்ஸே இருந்ததுடன் குறித்த தொடரின் ஆட்ட நாயகன் விருதினையும் அவர் வென்றிருந்தார். இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் இதுவரையில் டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மெதிவ்ஸ் மேற்கிந்திய தீவுகளிலும் இலங்கை அணிக்கு முதல் டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள முயற்சிப்பார்.

“நாம் எதிர்பார்க்கும் வெற்றி அதுதான். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் உலகில் பலம் கொண்ட அணியாக வலம் வந்த ஒன்று. இதனால், அங்கே வெற்றி பெறுவது சிறப்பான விடயம். நாங்கள் கடந்த காலங்களில் அதனை அங்கே செய்யவில்லை. இம்முறை எமக்கு அந்த வெற்றி கிடைத்தால் அது நாம் பெற்ற சிறப்பான அடைவாக இருக்கும்“

காயத்தில் இருந்து திரும்பியிருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு விளையாடும் முதலாவது தொடர் இதுவாகும். பங்களாதேஷ் அணியுடன் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் மெதிவ்ஸ் காயத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது காயங்கள் பற்றி கதைத்த மெதிவ்ஸ்,

“நான் கடந்த ஆண்டிலும் சில போட்டிகளை (காயத்தினால்) தவறவிட்டிருந்தேன். நான் இப்போது அணிக்கு திரும்பியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் காயங்களிலிருந்து சுகத்தினை பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அதன்படி இதுவரையில் எல்லாம் சரியாகவே நடந்திருக்கின்றது. எனக்கு எல்லோரிடமிருந்தும் நல்ல முறையில் ஆதரவுகள் கிடைத்திருந்தன“  எனக் குறிப்பிட்டிருந்தார்.