இரட்டைச் சதங்களில் பிராட்மனை முந்திய மயங்க் அகர்வால்

79
BCCI

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 

கடந்த மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன் முதல் டெஸ்ட் சதத்தை, இரட்டை சதமாக அடித்து சாதித்த மயங்க் அகர்வால், 2 மாதங்களுக்குள் தனது 2 ஆவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்தார். 

டெஸ்ட் அரங்கில் முரளிதரனுக்கு இணையான சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஷ்வின்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக்கின் விக்கெட்டை…

இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது, நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி வெறும் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து இந்தியா தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் – ஷெடெஸ்வர் புஜாரா ஜோடி பொறுப்பாக ஆடி முதல் நாள் வரை அடுத்த விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

மயங்க் அகர்வால் 32 ஓட்டங்களை எடுத்த போது, ஸ்லிப்பில் எளிதான பிடியெடுப்பு ஒன்றை பங்களாதேஷ் அணி தவறவிட்டது. அது எத்தனை பெரிய தவறு என்பது தற்போது மயங்க் அகர்வால் அடித்த இரட்டை சதம் மூலமாக தெரிய வந்துள்ளது.

போட்டியின் 2 ஆவது நாளான நேற்று (15) 98 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 183 பந்துகளில் சதம் அடித்தார். சதத்தோடு நிற்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

196 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 303 பந்துகளில் 25 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் இரட்டை சதம் அடித்தார்.

பின்னர், முச்சதத்தை நோக்கி இன்னும் அதிரடியை கூட்டிய அவரம் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பிடிகொடுத்து 243 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கார், விராட் கோஹ்லிக்கு பின் மூன்றாவது வீரராக மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.

அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை 5 ஓட்டங்களால் தவறவிட்ட அவர், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இரண்டு இரட்டைச் சதங்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார். 

கர்நாடகாவைச் சேர்ந்த 28 வயதுடைய மயங்க் அகர்வால் இதுவரை 12 டெஸ்ட் இன்னிங்சுகளில் விளையாடி 858 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் இரண்டு இரட்டைச் சதம், ஒரு சதம், மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கும்.

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய மயங்க் அகர்வால், 2016 ஆம் ஆண்டில் என்னுடைய மனநிலையை மாற்றினேன். தோல்வி குறித்த என்னுடைய அச்ச உணர்வை கைவிட்டேன். 

அதன்பிறகு, அதிக அளவில் தாகம் கொண்டு விளையாடினேன். டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நாளில் இருந்து நான் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தேன். முதல் போட்டியில் மெல்பேர்னில் விளையாடியது சிறப்பன தருணம். அப்போது, இந்திய அணி தொடரை வெல்ல என்னுடைய துடுப்பாட்டம் உதவியாக இருந்ததில் பெரும் மகிழ்ச்சி. அந்த உணர்வு என்னில் குடிகொண்டுவிட்டது. அந்த உணர்வுதான், இந்திய அணி தொடரை வெற்றிபெற செய்ய வேண்டும் என தூண்டியது.

ஒவ்வொரு பந்தினையும் எதிர்கொள்வது முக்கியமான விடயமாகும். ரஹானே சிரேஷ்ட வீரர். அவர் எனக்கு களத்தில் ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால் தடுப்பாட்டம் ஆட முடிவு செய்தோம். 

ஆனால், அதிசீக்கிரமாக தடுப்பாட்டம் கூடாது என்றும் நினைத்தோம். நல்லதொரு இணைப்பாட்டத்தினை அமைத்து அணியை வலுப்படுத்த வேண்டும். அதனால், பந்தினை நன்றாக கணித்து விளையாடினேன் என்று கூறியுள்ளார்.

எனவே, குறுகிய காலத்தில் இரண்டு இரட்டை சதம் அடித்துள்ள மயங்க் அகர்வால் ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார். பல சாதனைப் பட்டியலில் தன் பெயரை இணைத்துக் கொண்டுள்ளார். 

குறைந்த இன்னிங்க்ஸ் 

குறைந்த இன்னிங்சில் தன் முதல் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் வினோத் காம்ப்ளிக்கு (5 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தில் இருக்கிறார் மயங்க் அகர்வால் (12 இன்னிங்ஸ்). டொன் பிராட்மன் 13 இன்னிங்சுகளில் தான் இரண்டு இரட்டை சதங்களை அடித்தார். அந்த சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்தார்.

ஒரே ஆண்டில் இரண்டு  டெஸ்ட் இரட்டைச் சதம்

ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் இரட்டைச் சதம் அடித்த இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் விரேந்தர் சேவாக் மற்றும் மயங்க் அகர்வால் மட்டுமே. அதிலும் மயங்க் அகர்வால் வெவ்வேறு டெஸ்ட் தொடர்களில், அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்துள்ளார்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தரை நியமிக்க திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரபல தென்னாபிரிக்க…

டெஸ்ட் சம்பியன்ஷிப்

ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் முறையாக இரண்டு இரட்டைச் சதம் அடித்த வீரர் மயங்க் அகர்வால் தான். ஸ்டீவ் ஸ்மித், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, மயங்க் அகர்வால் மட்டுமே டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<