பூரண உடல் தகுதியை நிரூபித்துள்ள மெதிவ்ஸ், லக்மால்

615

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய இருவரும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்காக பூரண உடற்தகுதியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் காயங்களுக்கு ஆளாகியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகிய இரண்டு வீரர்களும் அதிலிருந்து குணமாகியதை அடுத்து கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாமில் பெயரிடப்பட்டிருந்தனர். எனினும், இந்த சுற்றுப் பயணத்தில் விளையாட வேண்டுமெனில் அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான பூரண உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்த சுற்றுப் பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் டெஸ்ட் வீரர்கள் குழாம் கண்டியில் எட்டு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தது. புதன்கிழமை (16) முடிவடைந்த இந்த பயிற்சி முகாமின் போது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளுக்கான தங்களது உடற்தகுதியை நிரூபித்திருந்தனர்.

30 வயதாகும் அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த ஜனவரி மாதம் பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது உபாதைக்கு ஆளாகியிருந்தார். மெதிவ்ஸ் இந்த உபாதையிலிருந்து விரைவாக தேறியிருந்த போதிலும், அவருக்கு சுதந்திரக் கிண்ண T20 தொடருக்காக தயராகும் போது மீண்டும் முழங்கால் தசையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், மெதிவ்ஸ் குறித்த தொடரோடு சேர்த்து  நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

இதேவேளை, விலா எலும்புப் பிரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் காலி அணியின் தலைவரான சுரங்க லக்மால் அண்மையில் இடம்பெற்று முடிந்த முதல் தர மாகாண கிரிக்கெட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தை முழுமையாக இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லக்மால் தற்போது போட்டித் தகுதியைப் பெற்றிருக்கின்ற போதிலும் இந்த சுற்றுப் பயணத்தில் அதிக வேலைப்பளு கருதி  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. லக்மால் போன்று இலங்கையின் முக்கிய சுழல் பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டியில் இடம்பெற்ற பயிற்சி முகாமின் போது இலங்கை டெஸ்ட் அணிக்குள் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவுக்கு இடதுகை கட்டை விரலில் உபாதை ஏற்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக அந்த உபாதை மோசமான நிலை எதனையும் அடைந்திருக்கவில்லை.

ஹேரத், லக்மால் ஆகியோர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே

இலங்கை அணி இந்த சுற்றுப் பயணத்திற்காக இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் பயணிக்கின்றது. இந்த சுற்றுப் பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட்டில் நடைபெறும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென். லூசியா நகரிலும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பார்படோஸ் நகரிலும் இடம்பெறுகின்றது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக இலங்கை அணி பத்து வருடங்களின் முன்னரே டெஸ்ட் தொடர் ஒன்றில் மேற்கிந்திய தீவுகளில் விளையாடியிருந்தது. அத்தோடு, இதுவரையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர் எதனையும் கைப்பற்றாமல் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை அணி இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடும் வீரர்கள் இருவரை வைத்திருப்பதனால் 17 பேர் கொண்ட குழாமை மேற்கிந்திய தீவுகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<