அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா

2299

இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வருட இறுதியில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்று குறிப்பிட்டுள்ள குமார் சங்கக்கார, அணியின் பந்து வீச்சின் ஸ்தீரத்தன்மை இதுவரையில் முழுமையாக வெளிப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் குறித்து கருத்து வெளியிடும் போதே, குமார் சங்கக்கார இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு சிறந்த அணியாக செல்லும் என நினைக்கிறேன். அணியில் அற்புதமான துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சு பக்கம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நாம் எதிர்கொள்ளவுள்ள அணியை எட்டக்கூடிய அல்லது சமாளிக்கக்கூடிய ஓட்ட எண்ணிக்கைக்கோ, அல்லது அதனை விடவும் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியுமாயின், எமது துடுப்பாட்ட வீரர்கள் அவர்களது பணியை சிறப்பாக செய்வர்” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை அணியில் கடந்த ஜனவரி மாதத்தில் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்த அஞ்செலோ மெத்திவ்ஸ், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தற்போது விளையாட ஆரம்பித்துள்ளார். சகலதுறை வீரரான மெத்திவ்ஸ், உபாதை காரணமாக தனது பந்து வீச்சை கைவிட்டு, துடுப்பாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார். கடந்த வருடம் நடைபெற்று முடிந்த சம்பியன்ஷிப் கிண்ண கிரிக்கெட் தொடரில், மெத்திவ்ஸ் ஒரு பந்து கூட வீசியிருக்கவில்லை. இந்த நிலையில், மெத்திவ்ஸ் உபாதையிலிருந்து நீங்கி, மீண்டும் சகலதுறை வீரராக செயற்படுவாராக இருந்தால், உலக்க கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதையும் சங்கக்கார வெளிப்படுத்தியுள்ளார்.

அஞ்செலோ மெத்திவ்ஸ் உலகக் கிண்ணத்துக்கு எப்படி செல்லப்போகின்றார் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். தசைப்பிடிப்பு உபாதையிலிருந்து மீண்டு, சகலதுறை வீரராக அவர் உலகக்கிண்ணத்துக்கு செல்வாராயின், அது இலங்கை அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

“அதுமாத்திரமின்றி மிகப்பெரிய தொடரொன்றுக்கு செல்லும் போது இலங்கை அணி, எப்படியும் சிறப்பாக விளையாடும் என்ற உண்மை கடந்தகால வரலாறுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அணி மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது.”

லஹிரு குமாரவுக்கு அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை

இதேவேளை இலங்கை அணியின் துடுப்பாட்ட நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து, ஓய்வுபெற்ற சங்கக்கார, மீண்டும் உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா? என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில்,

”ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தை நம்மால் மீண்டும் எதிர் திசைக்கு திருப்ப முடியாது. அதேபோன்று வயது செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. நான் ஓய்வுபெற்றது சரியான முடிவுதான். போட்டிகளை அரங்கிலிருந்து பார்வையிடும் ஒரு பார்வையாளனாக  இருப்பதற்கே விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அணி அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் எதிரணிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக குமார் சங்கக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க