லஹிரு குமாரவுக்கு அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை

1063

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார நேற்று (30) இடம்பெற்ற பயிற்சியின்போது காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று (30) இரவு இடம்பெற்ற பயிற்சியின்போது களத்தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட லஹிரு குமாரவின் வலது கையின் மோதிர விரல் மற்றும் சுண்டு விரலுக்கு இடையில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருப்பதாக இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் குறிப்பிட்டார். இதனால் அவர் நாளை (1) தம்புள்ளையில் நடைபெறவிருக்கும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்த போட்டிக்கு முன்னர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

நேற்று பயிற்சிக்கு இடையே லஹிரு குமாரவின் வலதுகை மோதிர விரல் மற்றும் சுண்டு விரலுக்கு இடையில் வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார். நாளைய போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் அவருக்கு பதில் விளையாடும் வீரர் யார் என்பது பற்றி நாம் முடிவு எடுப்போம்என்று ஊடகவியலாளர் சந்திப்பில் மெதிவ்ஸ் தெரிவித்தார்.   

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) தம்புள்ளையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 21 வயதுடைய லஹிரு குமார மூன்று ஓவர்கள் மாத்திரமே பந்து வீசினார். இந்த ஓவர்களில் அவர் 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

லஹிரு குமார உபாதைக்கு உள்ளாகி இருப்பதால் நாளை நடைபெறும் போட்டியில் கசுன் ராஜிதவுக்கு தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கசுன் ராஜித்த கடந்த ஜுன் மாதம் இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது தனது கன்னி டெஸ்டில் ஆடினார். அவர் அந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

அதேபோன்று லஹிரு குமாரவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.    

இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.