இளம் வீரர்களின் பிரகாசிப்புகளுக்கான காரணம் என்ன? கூறும் ஷானக!

Asia Cup 2022

687

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக்கிண்ணத் தொடரின் சம்பியனாக 6வது தடவையாக இலங்கை கிரிக்கெட் அணி மகுடம் சூடியது.

போட்டித்தொடரில் இளம் அணியுடன் களமிறங்கிய இலங்கை அணி, போட்டித்தொடருக்கு முன்னர் சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறுமா? என்ற கேள்விகள் இருந்தபோதும் கிண்ணத்தை சுவீகரித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

>> என்ன தவறு நடந்தது? தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம்

முக்கியமாக இலங்கை அணியின் இணைக்கப்பட்டிருந்த இளம் வீரர்கள் ஆசியக்கிண்ணம் போன்ற மிகப்பெரிய தொடரில் விளையாடிய அனுபவம் இல்லாவிட்டாலும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர்.

இதில் வேகப்பந்துவீச்சாளர்களான அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரமோத் மதுசான் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்களாக மாறியிருந்தனர்.

இவ்வாறு இளம் வீரர்கள் தேசிய அணியில் இணைந்தவுடன் அவர்களுடைய முழுமையான பிரகாசிப்பை வெளிப்படுத்துவதற்கு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் ஏற்படுத்தியுள்ள சூழல் மிகமுக்கியமான காரணம் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

“எம்மிடம் திறமையான அணி ஒன்று உள்ளது. அனுபவம் குறைவாக இருந்தாலும் போட்டியில் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்கின்றனர். இதற்கு காரணம் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அனுபவ வீரர்கள், இளம் வீரர்களுக்கான சரியான சூழலை உருவாக்கியுள்ளனர்.

புதிதாக வரும் வீரர்களுக்கு இந்தவிடயம் சாதகத்தை கொடுக்கும். அவர்களால் பயமில்லாமல் விளையாடமுடியும். எந்த இடத்திலும் களத்தடுப்பில் ஈடுபடமுடியும். அதற்கான ஆதரவுகள் உள்ளன. துடுப்பெடுத்தாடும்போதும் அவர்களுக்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீரர்களிடத்தில் உள்ள நம்பிக்கைதான் அனைத்துக்கும் ஆரம்பம் என கருதுகின்றேன்” என குறிப்பிட்டார்.

இதேவேளை ஆசியக்கிண்ணத்தில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் ஷானக கருத்து வெளியிட்டார்.

“உலகக்கிண்ணமானது இதைவிட வித்தியாசமான ஆடுகளம் மற்றும் காலநிலையில் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட ஆடுகளங்களில் நாம் முதல் சுற்றில் விளையாடுவது எமக்கு சாதகமாகும்.

குறித்த தொடரிலும் நாம் சிறப்பாக விளையாடி வெற்றியை பெறுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கான திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்து கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<