இந்திய வீரர்களுகெதிராக கொந்தளித்த திக்வெல்லவின் மறுமுகம்

7511
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கொல்கத்தா டெஸ்ட் போட்டி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் செல்ல இரு அணி வீரர்களிடையேயும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன.

விராட் கோஹ்லியின் அதிரடியான சதத்தின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ஒட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக இறுதியில் சமநிலையில் முடிவுற்றது.  

போட்டிகயின் இறுதி நாளன்று இந்தியாவின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அணி மளமளவென ஒருபுறத்தில் ஆட்டமிழக்க, மறுபுறத்தில் இலங்கை அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கும், இந்தியாவின் பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கும் இடையில் போட்டியின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர் விலகல்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20)…

2ஆவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி தோல்வியடையும் நிலைமையில் இருந்தது. ஆனால் இலங்கை வீரர்கள் வெற்றியைப் பற்றி சிந்திக்காமல் எப்படியாவது போட்டியை சமநிலையில் முடிக்கும் நோக்கில் விளையாடினர்.   

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இதில் போட்டியை சமநிலையில் நிறைவு செய்வதற்காக நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடிய நிரோஷன் திக்வெல்ல 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களினைப் பெற்று அணியை தோல்வியிலிருந்து மீட்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்த திக்வெல்ல, 2 ஓவர்களில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். அதனையடுத்து போட்டியின் 14ஆவது ஓவரில் அஷ்வினுக்கும் திக்வெல்லவுக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டில் கோஹ்லியும் இணைந்துகொண்டார். எனினும் களத்தில் இருந்த நடுவர் தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார்.

இதனையடுத்து போட்டியின் 18ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்தில் பௌண்டரி ஒன்றை பெற்றுக்கொண்ட திக்வெல்ல, கிரிக்கெட் விதிமுறைகளை மீறி வீரர்களை களத்தடுப்பில் வைத்திருந்ததை கவனித்து அதனை நடுவரிடம் முறையற்ற பந்தாக்க கோரியிருந்தார். இதன்படி அப்பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டது.

இதில் 2ஆவது பந்தை வீச ஷமி ஓடி வர முயன்ற போது நிரோஷன் திக்வெல்ல தயாராகவில்லை. இதனால் ஷமி வெறுப்படைந்தார். மேலும் தலையைக் குனிந்தபடியே ஷமியை பின்னால் செல்லுமாறு திக்வெல்ல கையை அசைத்து சைகை செய்தார். அது கோஹ்லி, ஷமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

இதனையடுத்து ஷமி, நிரோஷனிடம் சில வார்த்தைகளைப் பிரயோகித்தார், அடுத்த பந்து முடிந்தவுடன் கோஹ்லி ஸ்லிப்பிலிருந்து வந்து ஓரிரு வார்த்தைகளை தெரிவித்தார். மீண்டும் திக்வெல்ல ஸ்டம்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். இதன்போது நடுவர் திக்வெல்ல, கோஹ்லியை அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் பிறகு இரு அணி வீரர்களும் சமாதானமடைந்தனர்.

இதேவேளை, குறித்த போட்டியின் போது இந்திய விக்கெட் காப்பாளர் சாஹா பிடியெடுப்பு செய்துவிட்டு அதனை ஆட்டமிழப்பாக கோரிக்கை விடுத்தபோது அது நிலத்தில் பட்டதாக தெரிவித்து நிரோஷன் வாதாடினார்.

DRS சர்ச்சையை தில்ருவான் பெரேராவுக்காக தெளிவுபடுத்த விரும்பும் ஹேரத்

இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத்…

இவையனைத்துக்கும் மத்தியில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமியின் ஆக்ரோஷத்திற்கு தனியொரு வீரராக நிரோஷன் திக்வெல்ல முகங்கொடுத்ததுடன், விராட் கோஹ்லியுடனும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களிலும் ஈடுபட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் போட்டி நிறைவடைய ஒரு மணித்தியாலங்களுக்குள் அரங்கேறின. இவை அனைத்தும் இப்போட்டியின் பிறகு பெரிதும் பேசப்பட்ட விடயங்களாக மாறின.

திக்வெல்லவின் இந்த செயற்பாடு எப்போதும் மைதானத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டிவருகின்ற இந்திய வீரர்களுக்கும் ஆத்திரத்தை கொடுத்திருந்தாலும், அவையனைத்துக்கும் தனியொரு வீரராக முன்நின்று முகங்கொடுத்த திக்வெல்ல, இறுதியில் அனுபவமிக்க வீரரைப் போல நடந்து கொண்டு பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்நிலையில் இளம் வீரர் நிரோஷன் திக்கெல்ல மைதானத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் தமது பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிரணி வீரர்கள் தகராறில் ஈடுபடுகின்ற போது அதனை கண்டு பயப்படாமல், எதிர்த்து நின்று முகங்கொடுக்கின்ற தைரியம், சிறந்த கிரிக்கெட் அறிவு மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல நல்ல விடயங்கள் நிரோஷன் திக்வெல்லவின் இந்த குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் காணமுடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச ஹபீசுக்குத் தடை

முறையற்ற பாணியில் பந்து வீசியது ஊர்ஜிதம்…

”இரண்டாவது இன்னிங்ஸில் நிரோஷன் திக்வெல்லவின் விசித்திரமான நடத்தையை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்றுமொரு சிறந்த டெஸ்ட் போட்டியாக இது இருந்தது. கோஹ்லி சிறப்பாக விளையாடியிருந்தார். அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

திக்வெல்லவின் இந்த நடத்தை குறித்து இலங்கை அணிக்காக வர்னணையில் ஈடுபட்ட, முன்னாள் வீரரான ரசல் ஆர்னல்ட் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிடுகையில், நிரோஷன் திக்வெல்லவிடம் இருந்த தைரியம் மற்றும் போட்டிக்கு முகங்கொடுத்த விதம் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த மற்றைய வீரர்களிடம் காணமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில்,நிரோஷன் எப்போதும் சவாலை விரும்புகின்ற வீரர். அவர் விளையாடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதற்கு முயற்சிப்பார். அதிலும் எதிரணியினை சிறந்த முறையில் எதிர்கொள்ளவே எப்போதும் விரும்புவார். எனவே, இப்போட்டியில் அவர் தவறிழைத்ததாக நான் கருதவில்லை. ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள்” என சந்திமால் தெரிவித்திருந்தார்.

ஓட்டுமொத்தத்தில் திக்வெல்லவின் செயற்பாடு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்காரவின் நடத்தை குணங்களை ஒத்ததாகவும் காணப்படுகின்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

எனினும், இலங்கை அணி தோல்வியின் பிடியில் சிக்கிய நிலையில் கடைசி கட்டத்தில் இலங்கை வீரர்கள் நேரத்தை கடத்துவதில் கவனம் செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.   

எவ்வாறிருப்பினும் இரு அணிகளும் கடைசி நாளில் உணர்வுடன் விளையாடியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை அதிகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.