லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமாகும் மஹேல ஜயவர்தன

3293
Mahela Jayawardene

இந்த பருவகாலத்திற்கான  இங்கிலாந்தின் T-20 ப்ளாஸ்ட் (T-20 Blast) தொடரில் விளையாட லங்கஷைர் அணியானது இலங்கையின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தனவினை ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிலிருந்து அரவிந்த டீ சில்வா விலகல்

மஹேல இதே T-20 ப்ளாஸ்ட் தொடரின் கடந்த பருவகாலத்தில் சோமர்செட் அணிக்காக விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் உள்ளூர் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காகவும், நியூசிலாந்தின் உள்ளூர் தொடரில் சென்ட்ரல் ஸ்டேக் அணிக்காகவும் ஆடியிருந்தார்

தற்பொழுது 39 வயதாகும் மஹேல, 2014ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணத்தினை இலங்கை வெல்ல பெரிதும் பங்களிப்பு செய்ததோடு, இதுவரை T-20 போட்டிகளில் மொத்தமாக 5,455 ஓட்டங்களைக் குவித்திருக்கின்ற ஒரு முக்கிய வீரராவார்.

லங்கஷைர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிளேன் செப்பல், மஹேல குறித்து பி.பி.சி வானொலிக்கு கருத்து தெரிவிக்கும்பொழுது  “அவரது துடுப்பாட்டத்தினை காண்பதற்கு மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றேன் “ எனக் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

மேலும், “T-20 போட்டிகளில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களில் அவரும் ஒருவர். அதோடு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் திறம்படச் செயற்படக்கூடியவர். தலைமைத்துவ அனுபவமும் அவருக்கு மிகவும் அதிகம். எல்லா வகையிலும் அவர் எமது அணிக்கு வலுச்சேர்ப்பார்“  எனவும் கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டிற்கான T-20 ப்ளாஸ்ட் தொடரின் சம்பியனாகியிருந்த லங்கஷைர் அணியானது கடந்த பருவகாலத்தில் குழுநிலையுடன் (Group Stage) தமது ஆட்டத்தினை முடித்திருந்தது.

லங்கஷைர் அணியின் சபை உறுப்பினர்களில் ஒருவரான பவுல் எல்லோட் கடந்த ஜனவரி மாதம் பி.பி.சி வானொலி சேவைக்கு ரெட் ரோஸ் கவுண்டி என்னும் சிறப்பு பெயரினால் அழைக்கப்படும் தமது அணிக்கு T-20 கிரிக்கெட்டில் “ஐக்கோனிக் (Iconic) வீரர் அல்லது பயிற்றுவிப்பாளர் “ ஒருவரினை பார்த்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜயவர்தன அவ்வணிக்கு இரண்டாவதாக ஒப்பந்தமாகும் வீரராக காணப்படுவதோடு,  ஜுலை 7ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதி வரை என்கிற காலக்கேட்டில் அவர் விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னதாக, லங்கஷைர் அணியானது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கானை தமக்காக விளையாட அழைத்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்குகொள்வதை உறுதிப்படுத்திய இந்திய அணி

மஹேலவின் மனைவி டேனிஷ் (டென்மார்க்) இனத்தினை சேர்ந்த காரணத்தினால் மஹேலவிற்கு கிடைக்கப்பெற்றிருக்கும், துணைவர் (Spousal) வீசா காரணமாக அவர் கடல் கடந்த நாட்டவராக இத்தொடரில் கருதப்படவில்லை.

தான் அணியில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்த மஹேல, “லங்கஷைர் அணியானது சிறப்பான வரலாற்றினைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து உள்ளூர் அணிகளில் ஒன்றாகும். இக்கழகத்தில்  இளம் வீரர்களின் குழுவொன்று காணப்படுகின்றது. அவர்களுடன் இணைந்து செயற்பட கிடைத்த சந்தர்ப்பத்தினையும் இவ்வருடத்தின் கோடைகால T-20 ஆட்டத்தில் பங்கேற்பதினையும் மகிழ்வான ஒன்றாக கருதுகின்றேன். “ எனக் கூறியிருந்தார்.

“நான் இதுவரையில் நட்வெஸ்ட் T-20 ப்ளாஸ்ட் தொடரினை வென்றதில்லை. அக்கிண்ணத்தினை கைப்பற்றிக்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு அனுபவத்தினை லங்கஷைர் அணியின் ஜொலிப்புடன் (இத்தொடர் மூலம்) காண விரும்புகின்றேன்“ என மேலும் மஹேல கருத்து தெரிவித்திருந்தார்.