உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெறுமா இலங்கை?

Sri Lanka tour of New Zealand 2023

271

ஐசிசி உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும் இறுதி வாய்ப்புக்காக நியூசிலாந்து அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்ள இலங்கை தயாராகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் 21 போட்டிகளில் இலங்கை அணி விளையாடியுள்ள நிலையில், 7 போட்டிகளில் வெற்றிபெற்று 77 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்திருக்கிறது.

லசித் குரூஸ்புள்ளே சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன்

ஏற்கனவே 7 அணிகள் நேரடி தகுதியை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் கடைசி ஒரு இடத்துக்கான போட்டியில் இலங்கை இணைந்துள்ளது.

இலங்கை அணி   நேரடி தகுதியை பெற்றுக்கொள்வதற்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளையும் வெற்றிக்கொள்ள வேண்டும். இலங்கை அணி 2-1 என தொடரை வென்றாலும் மறுபக்கம் நெதர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகளை தென்னாபிரிக்க அணி வெற்றிக்கொண்டால், இலங்கை அணிக்கான வாய்ப்பு பறிபோகும்.

இவ்வாறான இன்னல்களுக்கும், அழுத்தத்துக்கு மத்தியிலும் இலங்கை அணிக்கு ஒருசில நம்பிக்கை தரக்கூடிய விடயங்களும் நடந்தேறியிருக்கின்றன. அணியின் கட்டமைப்பை பொருத்தவரை இலங்கை அணிக்கு கடந்தகாலங்களாக ஒருநாள் போட்டிகளில் மத்தியவரிசை துடுப்பாட்டத்தின் அனுபவமின்மை மிகப்பெரும் கேள்விகளை உண்டாக்கியிருந்தது.

எனினும் அஞ்செலோ மெதிவ்ஸின் மீள்வருகை இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இலங்கை அணியிடம் ஓங்கியுள்ளது. அதுமாத்திரமின்றி உபாதைக்குள்ளாகியிருந்த பெதும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், அணியில் புதிதாக இணைந்திருக்கும் நுவனிந்து பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அசலங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் வீரர்களாக எதிர்பார்க்கப்படுகின்றனர்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் பலர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்காக இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுக்கக்கூடியவர்களாக மாறுக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், டிம் சௌதி, டெவோன் கொன்வே, மிச்சல் சென்ட்னர் மற்றும் மைக்கல் பிரேஷ்வல் போன்ற வீரர்களின் வெளியேற்றம் இலங்கை அணிக்கு அதிகமான சாதகங்களை கொடுத்திருக்கிறது.

குறித்த இந்த சாதகங்களை பயன்படுத்திக்கொண்டு நியூசிலாந்து அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்துவதே இலங்கை அணிக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஆனால், இந்த சவாலை எதிர்கொண்டு முன்னாள் உலக சம்பியன்களான இலங்கை உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற்றுக்கொள்வார்களா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கடந்தகால மோதல்கள்

இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்தகால ஒருநாள் மோதல்களை பார்க்கும்போது நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே இரண்டு அணிகளும் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் நியூசிலாந்து அணி 49 போட்டிகளிலும், இலங்கை அணி 41 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன. அதிலும் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து மேலும் சிறந்த முடிவுகளை கொண்டுள்ளது.

நியூசிலாந்தில் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 43 போட்டிகளில் இலங்கை அணி 12 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளதுடன், 28 தோல்விகளை சந்தித்துள்ளது.

அதேநேரம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடரை எடுத்துக்கொண்டால் 16 தொடர்களில் 3 தொடர்களில் மாத்திரமே இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இறுதியாக 2012ம் ஆண்டு தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் வெற்றியை பெற்றிருக்கும் இலங்கை அணி, சுமார் 11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு முக்கியமான தொடர் வெற்றிக்காக காத்திருக்கிறது. அதேநேரம் முதல் ஒருநாள் போட்டியானது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 100வது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரித் அசலங்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களாக உள்ளதுடன், தொடர்ந்தும் தங்களுடைய பிரகாசிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் பெதும் நிஸ்ஸங்க உபாதைக்கு பின்னரும், சரித் அசலங்க இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஓட்டங்களை குவிக்காமலும் இந்த தொடருக்கு திரும்பியுள்ளனர். எனவே, இந்த தொடரில் அனுபவ ரீதியாகவும், மீண்டும் அணிக்கு திரும்பி ஓட்டங்களை குவிக்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் உள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5000ம் ஓட்டங்களையும், 100 விக்கெட்டுகளையும் கடந்துள்ள மெதிவ்ஸ், நியூசிலாந்து அணிக்கு எதிராக 20 இன்னிங்ஸ்களில் 34.84 என்ற சராசரியில் 466 ஓட்டங்களை பெற்றுள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய துடுப்பாட்ட பிரகாசிப்பு        இந்த ஒருநாள் தொடருக்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொம் லேத்தம்

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் IPL தொடருக்காக அணியிலிருந்து வெளிறேியுள்ள போதும், அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொம் லேத்தம் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.

கேன் வில்லியம்சன், டெவோன் கொன்வே போன்ற வீரர்கள் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களாக அதிகம் பேசப்பட்டு வந்தாலும் கடந்த 2 வருடங்களில் நியூசிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவாராக லேத்தம் இடம்பிடித்துள்ளார். இவர் 21 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடங்கலாக 45.35 சராசரியில் 771 ஓட்டங்களை குவித்துள்ளார்.

எனவே இவருடைய அனுபவம் மற்றும் முன்னணி வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி துடுப்பாட்டத்திலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

முதல் போட்டிக்கான உத்தேச பதினொருவர்

இலங்கை – பெதும் நிஸ்ஸங்க, நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன/தனன்ஜய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித

நியூசிலாந்து – பின் எலன், சாட் போவ்ஸ், வில் யங், டெரைல் மிச்சல், டொம் லேத்தம், கிளேன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பிளயர் டிக்னர், ஹென்ரி சிப்லே, மெட் ஹென்ரி, இஸ் சோதி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<