மஹேலவின் அசத்தல் வீணானது

1082
Mahela Jayawardane
@Getty Image

இங்கிலாந்தில் உள்ளூரில் நடைபெறும் நெட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் கிண்ணத்தில் இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன சமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரின் நேற்று நடைபெற்ற தெற்கு குழுவிற்கான போட்டியில் சமர்செட் அணியை சசெக்ஸ் அணி எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சமர்செட் அணி முதலில் சசெக்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தது.

இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சசெக்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 222 ஓட்டங்களைக் குவித்தது. சசெக்ஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய க்றிஸ் நேஷ் அதிக பட்சமாக 64 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 112 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். அவரைத் தவிர மற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லூக் ரயிட் 39 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 83 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 80 பந்துகளில் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தது. சமர்செட் அணியின் பந்துவீச்சில் ஜெமி ஓவர்டன் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

டில்ஷான் கவலையான நிலையில்

இதன்படி  மஹேல ஜயவர்தன விளையாடும் சமர்செட் அணிக்கு 120 பந்துகளில் 223 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் முதல் மூன்று வீரர்களும் 5 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். அதன் பின் 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய மஹேல ஜயவர்தன அணியை மீட்கும் பணியில் இறங்கினார். இலகுவான பந்துகளை பவுண்டரி கோட்டுக்கு வெளியிலும் நல்ல பந்துகளை நிதானமாக ஆடி ஒன்று இரண்டு ஓட்டங்களையும் பெற்றார். மஹேல ஒரு பக்கம் தாக்குப் பிடிக்க மற்றப் பக்கத்தால் விக்கட்டுகள் வீழ்ந்தன. இதனால் மஹேலவின் கரம் ஓங்கியது. வேகமாக ஓட்டங்களை எடுத்து  தனது அணி பெற வேண்டிய ஓட்டங்களைக் குறைக்கும் முயற்சியில் மஹேல ஈடுபட்டார். ஆனால் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்த பின் மஹேல ஆட்டம் இழந்தார்.

43 நிமிடங்கள் பொறுப்பாக நின்று விளையாடிய மஹேல 34 பந்துகளில் 4 நேர்த்தியான பவுண்டரிகள் மற்றும் 3 அற்புதமான சிக்ஸர்களை அடித்து 51 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டம் இழக்கும் போது மஹேலவின் ஸ்ட்ரைக் ரேட் 150.00 ஆகக் காணப்பட்டது.

இங்கிலாந்து மண்ணில் கால் பதிக்கப் போகும் குசல் மற்றும் பண்டார 

மஹேலவின் முக்கியமான விக்கட்டைத் தொடர்ந்து வந்த வெண்டர் மெர்வ்  34 நிமிடங்கள் வானவேடிக்கை காட்டி விட்டு 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இறுதியில் சமர்செட் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் சசெக்ஸ் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக சசெக்ஸ் அணி சார்பாக சதம் பெற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் நேஷ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நெட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் கிண்ணத்தில் மஹேல கலக்கும் சமர்செட் அணி தனது அடுத்த போட்டியில் நாளை  எசெக்ஸ் அணியை சந்திக்கிறது. டவுண்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 10மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்