பராலிம்பிக்கில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்

1530

மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் (பராலிம்பிக்) 2016இல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிட்ட தினேஷ் பிரியன்த ஹேரத் முதியான்சேலாகே வெண்கல பதக்கத்தை வென்றெடுத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளாhர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் இப்போட்டி இடம்பெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்துகொண்ட தினேஷ் பிரியன்த ஹேரத், ஆண்களுக்கான எவ்-46 பிரிவுக்கான ஈட்டி எரிதலில் பங்கு கொண்டார். அதில் அவர் 58.23 மீட்டர் தூரம் எரிந்து தாய் நாட்டிற்கான வெண்கல பதக்கத்தை பெற்றார்.

இவரது பிரிவுக்கான போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எரிந்து தங்க பதக்கத்தையும், சீன வீரர் குவோ சுன் லியாங் 59.93 மீட்டர் தூரம் எரிந்து வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். தேவேந்திர ஜஜாரியா, ஏற்கனவே அவர் நிலைநாட்டியிருந்த உலக சாதனையை (62.15 மீட்டர் – 2004) இதன்போது முறியடித்தார்.

இதுவரை நடந்த போட்டிகளில் இலங்கை பெற்றுக்கொண்ட முதலாவதும், இறுதியுமான பதக்கமாக ஹேரத்தின் இந்தப் பதக்கம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துத்தந்துள்ள தினேஷ் பிரியன்த ஹேரத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வெற்றி வீரருக்கு  Thepapare.com சார்பாக நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Olympic4