இங்கிலாந்து தொடருக்கான உத்தேச குழாத்தை அறிவித்த ஆஸி.!

1228

இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான 26 பேர்கொண்ட உத்தேச அணிக்குழாமினை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் டேனியல் சேம்ஸ், ரிலே மெரிடித் மற்றும் ஜோஸ் ப்லிப் ஆகிய மூன்று புதுமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர், அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடமால் இருந்த க்ளேன் மெக்ஸ்வேல் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தார் மொர்தசா

எனினும், அவுஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடித்திருந்த பீட்டர் ஹென்ஸ்கோம், ஷோர்ன் மார்ஷ் மற்றும் நெதன் குல்டர்-நெயில் ஆகியோர் இந்த குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில தொடர்களில் அவுஸ்திரேலிய அணிக்காக உள்வாங்கப்படாத மற்றும் வருடாந்த ஒப்பந்தம் வழங்கப்படாத மார்கஸ் ஸ்டொய்னிஸ் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிகம் விளையாடாத உஸ்மான் கவாஜா மற்றும் ட்ராவிஷ் ஹெட் ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களான ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் உபாதைக்கு முகங்கொடத்துள்ள நிலையில், அன்ரு டை குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உத்தேச குழாத்தை அறிவித்துள்ள போதும், இங்கிலாந்து தொடர் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இதுதொடர்பில் குறிப்பிட்ட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் பென் ஒலிவிர், “நாம் தொடர்ந்தும் இங்கிலாந்து அரசாங்க முகவர்களுடன் தொடர்புக்கொண்டு கலந்துரையாடி வருகின்றோம். தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதேநேரம், இந்த உத்தேச குழாமானது, பல மாநிலங்களில் உள்ள வீரர்களையும் இந்த தொடருக்காக தயார்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குழாம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரிக்கெட் அவுஸ்திரேலிய தேர்வாளர்  ட்ரெவர் ஹோன்ஸ், உயிரியல் பாதுகாப்பு முறைக்கு கீழ் ஒருநாள் மற்றும் T20  போட்டிகளில் விளையாடக்கூடிய தற்காலிக குழாம் ஒன்றை நாம் அறிவித்துள்ளோம். தொடர் நெருங்கும் காலப்பகுதியில் மற்றுமொரு குழாம் அறிவிக்கப்படும்.

அதேநேரம், உத்தேச குழாத்தில் சிறந்த இளம் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் கடந்த பிக்பேஷ் லீக் தொடரில் பிரகாசித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, ஆற்றலை வெளிப்படுத்தினால், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும். அதுமாத்திரமின்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாமானது எதிர்வரும் T20 உலகக் கிண்ணம் மற்றும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றை கருத்திற்கொண்டு பெயரிடப்பட்டுள்ளது” என்றார்.

எவ்வாறாயினும், இங்கிலாந்து தொடர் உறுதிசெய்யப்பட்ட பின்னர், கிரிக்கெட் அவுஸ்திரேலியா, தொடருக்கான இறுதி குழாத்தை அறிவிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய உத்தேச குழாம்

ஷீன் எபோட், அஷ்டன் ஆகர், அலெக்ஸ் கெரி, பெட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜோஸ் ஹெஷல்வூட், ட்ராவிஷ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லெபுசெங், நெதன் லையோன், மிச்சல் மார்ஷ், க்ளேன் மெக்ஸ்வேல், பென் மெக்டெமோர்ட், ரிலே மெரிடித், மைக்கல் நீஷர், ஜோஸ் ப்லிப், டேனியல் சேம்ஸ், டி ஆர்சி ஷோர்ட், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அன்ரு டை, மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க