ட்ராவிட் -கங்குலி சாதனையை முறியடித்த லம்ப், வெசல்ஸ் ஜோடி

1440
Lumb and Wessels

இங்கிலாந்து உள்ளூரில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையிலான ரோயல் லண்டன் கிண்ண ஒருநாள் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கட் போட்டியில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ஓட்டங்களை முதல் விக்கட் இணைப்பாட்டமாகப் பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 1999 உலகக் கிண்ண போட்டியின் போது இலங்கைக்கு எதிராக ட்ராவிட் -கங்குலி ஜோடி முதல் விக்கட்டுக்காக  318 ஓட்டங்களைக்  குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ஓட்டங்களைக் குவித்து மைக்கேல் லம்ப், ரிக்கி வெசல்ஸ் ஜோடியினர் முறியடித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாட்டிங்கம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்புக்கு 445 ஓட்டங்களைக் குவித்தது. இதில் மைக்கேல் லம்ப் 150 பந்துகளில் 21 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 184 ஓட்டங்களையும், வெசல்ஸ் 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 146 ஓட்டங்களையும் எடுத்து ஆரம்ப விக்கெட்டுக்காக 342 ஓட்டங்களைக் குவித்தனர். வெசல்ஸ் தனது சதத்தை 75 பந்துகளில் அடித்த்தார். இந்த ஜோடி 342 ஓட்டங்களை 39.2 ஓவர்களில் பெற்றது.

கொஹ்லியின் துடுப்பாட்டம் பிரமிக்க வைக்கிறது : முரளி

நாட்டிங்கம் ஷயரின் 445 ரன்கள் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டியில் இரண்டாவது அதிக ஓட்டங்களாகும். 2007ஆம் ஆண்டு குளஸ்டர் ஷயருக்கு எதிராக சரே அணி 496 ஓட்டங்களை 50 ஓவர்களில் குவித்துள்ளது. இது லிஸ்ட் ஏ சாதனையில் முதலிடம் வகிக்கிறது. அதிக இணைப்பாட்ட ஓட்டங்களுக்கான உலக சாதனையை வைத்திருப்பவர்கள் கிறிஸ் கெய்ல், மர்லன் சாமுவேல்ஸ்.  இவர்கள் 2015 உலகக் கிண்ணப் போட்டியின் போது சிம்பாப்வே அணிக்கு எதிராக இவர்கள் 372 ஓட்டங்களை பகிர்ந்தார்கள்.

இந்தப் போட்டியில் இன்னொரு ஆச்சரியமான அம்சம் என்னவெனில் நாட்டிங்கம் ஷயரின் 445 ஓட்ட இலக்கை துரத்தி நார்தாம்டன் ஷயர் அணி 48.2 ஓவர்களில் 425 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியின் ரோசிங்டன் என்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 97 ஓட்டங்களை எடுத்து அதிரடி ஆரம்பத்தைக் கொடுக்க, 5ஆம் விக்கட் இழந்த பின் களமிறக்கிய கிளெய்ன் வெல்ட் 63 பந்துகளில் 10 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களுடன் 128 ஓட்டங்களை விளாசினார்.

மொத்தம் இந்தப் போட்டியில் மட்டும் 870 ஓட்டங்கள்  குவிக்கப்பட்டுள்ளது. இது இன்னொரு உள்நாட்டு சாதனையாகும். இதுவும் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் குவிப்புக்கான உலக சாதனையை விட 2 ஓட்டங்கள்தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் ஜொஹனஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா – தென் ஆபிரிக்கா அணிகள் மோதிய ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 872 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது இன்றளவில் உலக சாதனையாக விளங்குகிறது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 435 என்ற வெற்றி இலக்கை தென் ஆபிரிக்க அணி 1  பந்து மற்றும் 1 விக்கட் மீதம் இருந்த நிலையில் அடைந்து உலக சாதனை வெற்றியை பெற்று இருந்தமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்