பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட மெஸ்சி ஒப்பந்தம்

177

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவராகத் திகழும் லியொனல் மெஸ்சி, தனது 13 வயது முதல் ஸ்பெய்னின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

அந்த அணிக்காக அவர் தொடர்ந்து 17 வருடங்களாக விளையாடி வந்தாலும், அவரது ஒப்பந்தம் அடுத்த வருடத்துடன் முடிவுக்கு வர இருந்தது. இதனையடுத்து மெஸ்சி உடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பார்சிலோனா கழகம் அழைப்பு விடுத்திருந்தபோதும் அதுதொடர்பில் மெஸ்சி தரப்பில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் பார்சிலோனாவுடனான ஒப்பந்தத்தை நீடிப்பாரா? அல்லது வீர்ரகளுக்கான வெளியேறும் முறை மூலம் அவ்வணிக்காக விளையாடியிருந்த நெய்மாரைப் போன்று வேறொரு அணிக்கு மெஸ்சி மாறுவாரா என்ற வதந்திகளும் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன.

FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு

இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் 4 வருடங்களுக்கு அதாவது 2021ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கழகத்துடன் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் மெஸ்சி நேற்று (25) கையெழுத்திட்டார்.

மெஸ்சியை எந்த அணியும் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக அவரது ஒப்பந்த தொகையை 700 மில்லியன் யூரோவாக (835 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பார்சிலோனா நிர்ணயித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே ஒப்பந்த காலம் முடியும் முன்பு மெஸ்சியை வேறு எந்த அணியாவது ஒப்பந்தம் செய்ய முன்வந்தால் பார்சிலோனா கழகத்திடம் 700 மில்லியன் யூரோக்களை செலுத்திய பிறகுதான் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பது ஒப்பந்த விதிமுறையாகும்.

இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதையடுத்து பார்சிலோனாவின் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில், ”என்னுடைய கால்பந்து வாழ்க்கையை பார்சிலோனா கழகத்துடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது எனது கனவாகும். எனவே அடுத்த வருடம் நிறைவுக்கு வரவுள்ள எனது ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான சரியான நேரம் இதுதான் எனக் கருதி நாம் அதை இன்று நிறைவேற்றினோம். எனவே பார்சிலோனாவுடன் தொடர்ந்து விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என மெஸ்சி தெரிவித்தார்.

பார்சிலோனா கழகத்துக்காக 602 கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள 30 வயதான மெஸ்சி, 529 கோல்களையும், அவ்வணிக்காக 30 சம்பியன் கிண்ணங்களை பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக விளங்கினார்.a