இலங்கை அணி வெற்றி ஓட்டத்தினை தொடருமா?

1873
Sri Lanka vs Bangaldesh - 2nd ODI

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, 91 ஓட்டங்களால் அபார வெற்றியினை பெற்று இந்த ஒருநாள் தொடரில் சிறந்த ஆரம்பத்தினை காட்டியிருக்கின்றது. 

வெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி…

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் அடுத்த போட்டி நாளை (28) முதல் ஒருநாள் போட்டி இடம்பெற்ற அதே, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, இலங்கை இரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்த போதிலும் குறித்த போட்டியோடு லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில் இருந்து பிரியாவிடை எடுத்தது கவலை தரும் விடயமாக அமைந்திருந்தது.

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் சேர்த்து  மொத்தமாக 227 ஒருநாள் போட்டிகளில் ஆடிய லசித் மாலிங்க, 338 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வண்ணம் ஒருநாள் போட்டி வாழ்க்கையினை நிறைவு செய்து  கொண்டார். 

இனி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்கு பின்னர், நாளை இடம்பெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதனை நோக்குவோம்.

இலங்கை அணி 

பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியில் இலங்கை அணி பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் காட்டியிருந்தது எனக் கூறமுடியும். குறிப்பாக இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. 

அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத்தவறிவரும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் சேர்த்து தாம் கடைசியாக ஆடிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 250 இற்கு மேற்பட்ட ஓட்டங்களையே  தமது துடுப்பாட்ட இன்னிங்ஸ்களின் போது பெற்றிருக்கின்றது. இவ்வாறான ஒரு சிறந்த துடுப்பாட்ட பெறுபேற்றையே இலங்கை அணி நாளைய போட்டியிலும் காண்பிக்க எதிர்பார்க்கும் எனலாம். 

இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய லசித் அம்புல்தெனிய

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்துவரும்…

இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் லசித் மாலிங்க இல்லாத காரணத்தினால், அவரின் இடத்தினை பிரதியீடு செய்ய வேகப்பந்து சகலதுறை வீரரான தசுன் சானக்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.  பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் திசர பெரேரா, ஜொலிக்க தவறியதனை அடுத்து தசுன் சானக்க ஒருசகலதுறை வீரராக இலங்கை அணிக்குள் வரலாம் என நம்பப்படுகின்றது. தசுன் சானக்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் அதிரடியான முறையில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதேநேரம், மாலிங்க இல்லாத நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறையினை நுவான் பிரதீப் முன்னெடுக்க, கசுன் ராஜித அல்லது இசுரு உதான இலங்கை அணிக்குள் உள்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இருக்கும் இலங்கை வீரர்களில் வழமைபோன்று குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன ஆகியோர் இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக வந்து ஓட்டங்கள் சேர்க்க, இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாந்துவும் திறமையினை வெளிப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் இலங்கை அணிக்கு மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் பெறுமதி சேர்க்க காத்திருக்கின்றனர்.

அயர்லாந்து அணியை வேகத்தால் வீழ்த்தியது இங்கிலாந்து

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அயர்லாந்து…

மேலும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த தனன்ஞய டி சில்வா இலங்கை அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளராகவும், மேலதிக துடுப்பாட்ட வீரராகவும் இரண்டாவது போட்டியில் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எதிர்பார்ப்பு இலங்கை அணி திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா, தசுன் சானக்க, லஹிரு குமார, நுவன் பிரதீப், இசுரு உதான

பங்களாதேஷ் அணி 

பங்களாதேஷ் அணியினை பொறுத்தவரையில் அவ்வணியில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களில், அதன் தலைவர் தமிம் இக்பால் முதல் போட்டியில் ஜொலிக்கவில்லை என்ற போதிலும், பங்களாதேஷ் அணியினுடைய துடுப்பாட்டத்துறையின் முதுகெலும்பாக செயற்படுவதற்கான ஆற்றலை அவர் கொண்டிருக்கின்றார்.  

அதேநேரம், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் போராட்ட அரைச்சதம் ஒன்றினை பெற்ற, முஷ்பிகுர் ரஹீம் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திவருவதால் அவரும் பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம்சேர்க்க கூடிய முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். 

மேலும் சப்பீர் ரஹ்மான், மஹ்மதுல்லா, சௌம்யா சர்க்கர் மற்றும் மொசாதிக் ஹொசைன் ஆகியோர் மூலம் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துறை இன்னும் பலம் பெறுகின்றது. 

“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்

இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகளாவிய…

அதேவேளை பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுத்துறையினை வேகப்பந்துவீச்சாளர்களான முஸ்தபிசுர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம் மற்றும் ருபெல் ஹொசைன் ஆகியோர் முன்னெடுக்க சுழல்பந்துவீச்சாளரான மெஹிதி ஹஸனும் பங்களிப்புச் செய்யவிருக்கின்றார். 

எதிர்பார்ப்பு பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால் (தலைவர்), சௌம்யா சர்க்கார்மொஹமட் மிதுன்முஷ்பிகுர் ரஹீம்மஹ்மதுல்லாமொஸாதிக் ஹொஸைன்சப்பீர் ரஹ்மான்மெஹிதி ஹஸன்ருபெல் ஹொசைன்சபியுல் இஸ்லாம்முஸ்தபிசுர் ரஹ்மான்

எதிர்பார்ப்பு வீரர்கள்

அவிஷ்க பெர்னாந்து (இலங்கை) – அவிஷ்க பெர்னாந்து இலங்கை அணிக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நம்பிக்கை தரும் துடுப்பாட்ட வீரராக அமைந்த போதிலும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஜொலிக்க தவறியிருந்தார். 

எனினும், தனது மதிநுட்பமான துடுப்பாட்டம் மூலம் எந்த பந்துவீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட அவிஷ்க பெர்னாந்து இலங்கை அணிக்காக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜொலிக்க எதிர்பார்க்ப்படும் முக்கிய துடுப்பாட்ட வீரராக உள்ளார். 

தமிம் இக்பால் (பங்களாதேஷ்) – அவிஷ்க பெர்னாந்து போன்று பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலும் முதல் ஒருநாள் போட்டியில் ஜொலிக்க தவறியிருந்தார். 

எனினும், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற பங்களாதேஷ் வீரராக இருக்கும் அவர், எப்போதும் நெருக்கடித்தரக் கூடிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் என்பது உண்மை. 

மைதான நிலைமைகள் 

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இடம்பெற்ற, அதே கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெறுகின்றது. இந்த மைதானம் முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவியினையும், சழல்பந்துவீச்சாளர்களுக்கு குறைவான உதவியினையும் வழங்கியிருந்ததை அவதானிக்க முடியுமாக இருந்தது. அதன்படி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அதே நிலைமையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<