கச்சிதமாய் எழுதப்பட்ட லசித் மாலிங்கவின் பிரியாவிடை

401

சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும் சரி லசித் மாலிங்க படைத்த வரலாற்று சாதனைகள் ஏராளம். அவரது தனித்துவமான பந்துவீச்சும், வித்தியாசமான தலைமுடி அலங்காரத்துக்குமான ரசிகர்கள் பட்டாளங்களை எம்மால் கணக்கிட முடியாது. அதற்கான சிறந்த உதாரணம் நேற்று நடைபெற்ற போட்டியில் படையெடுத்திருந்த அவரது ரசிகர்கள்.

மாலிங்கவின் இறுதிப்போட்டி. அதுவும் பிரியாவிடையை தரப்போகும் போட்டி. இந்தப் போட்டி எப்படி அமையப்போகிறது என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்பார்ப்புக்கு குறைவேதும் இல்லை. குசல் பெரேராவின் சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் வரவேற்க தக்க பங்களிப்புடன் மிகச்சிறந்த பிரியாவிடை மாலிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அணி வெற்றி ஓட்டத்தினை தொடருமா?

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள்……

கடைசி ஒருநாள் போட்டியில் தனது சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் மாலிங்க களமிறங்கும் போது, மைதானத்திலிருந்து ரசிகர்கள் எழுப்பிய ஒலி வானை பிளந்தது. “மாலிங்க! மாலிங்க! மாலிங்க” என எழும்பிய அந்த கோஷத்துக்கான முக்கியத்துவத்தினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இலங்கை அணிக்காக பல்வேறு வெற்றிகளை ஒருநாள் கிரிக்கெட்டில் பெற்றுக்கொடுத்த பெயர். இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது என்ற மனவேதனை இருந்தாலும், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் மாலிங்கவின் ஓய்வை மனம் ஏற்றுக்கொண்டிருந்தது.

இத்தனை வெற்றிகள், எத்தனை ஞாபகங்கள், எத்தனை வரலாறுகள் என மாலிங்கவின் கடந்தகாலத்தை சிந்திக்கும் போது, அவரது இறுதி ஒருநாள் போட்டி எப்படி அமையப்போகின்றது என்ற பயமும் மனதில் உதித்திருந்தது. ஆனால் அத்தனை அச்சத்தையும் களைந்த வகையில் ஒரு மிகச்சிறந்த வீரருக்கு எப்படி பிரியாவிடை போட்டி அமையவேண்டுமோ? கன கச்சிதமாய் ஒவ்வொரு சிறு சிறு அம்சங்களும் அமைந்திருந்ததுதான் மாலிங்கவின் பிரியாவிடைப் போட்டியின் சிறப்பம்சம்.

மாலிங்கவின் துடுப்பாட்டம்

பந்துவீச்சாளர் ஒருவர் தனது பிரியாவிடை போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதுதற்கான குறிக்கோளுடன் விளையாடுவது வழமை. அவருக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை நிச்சயமாக கூற முடியாது. ஆனால், அது மாலிங்கவுடைய நாள். இலங்கை அணி 7ஆவது விக்கெட்டினை இழக்க, 48ஆவது ஓவரின் நான்காவது பந்தில் மாலிங்க களமிறங்கினார். 

cricket இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவரான பேர்சி, தேசிய கொடியுடன் மாலிங்கவை மைதனத்துக்குள் அழைத்துச் செல்ல, ரசிகர்களின் கைத்தொலைபேசிகளின் ப்ளேஷில் (Flash) இருந்து ஒளிவெள்ளம் படரத்தொடங்கியது. மைதானம் முழுவதும் மின்மினி பூச்சிகள் போன்று குறித்த ஒளி வெள்ளம் தோன்ற மாலிங்க இறுதி ஒருநாள் போட்டியில் துடுப்பெடுத்தாடினார்.

Photos: Sri Lanka vs Bangladesh | 1st ODI Match

ThePapare.com |Viraj Kothalawala | 26/07/2019 Editing….

இறுதிப் பந்துவரை ஆட்டமிழக்காத மாலிங்க 6 பந்துகளை சந்தித்து, 6 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து கரகோஷங்களுடனும், ஆரவாரத்துடனும் ஓய்வறை திரும்பினார். இறுதிப் போட்டியில் இது மாலிங்கவின் முடிவல்ல இதுதான் ஆரம்பம் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

முதல் பாதி முடிவுபெற்றது. மறுபாதி ஆரம்பித்தது. இலங்கை அணி வீரர்கள் அனைவரும் துடுப்பாட்ட மட்டையால் கோட்டை எழுப்ப, அதில் நுழைந்து ஈர்க்கும் புன்னகையுடன் மைதானத்துக்குள் மாலிங்க கால்பதித்தார். 

விக்கெட்டுகளை பதம் பார்த்த மாலிங்கவின் யோர்க்கர்கள்

லசித் மாலிங்க என்றாலே அவருடைய அடையாளமாக இருப்பது யோர்க்கர் பந்துகள். ஒவ்வொரு முறையும் அவர் பந்துவீச தயாராகும் போதும், துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளை பாதுகாப்பதற்கே முன்னிரிமை கொடுப்பர். அப்படி இருக்கையில் அவரது இறுதிப் போட்டி என்றால் சொல்லத்தான் வேண்டுமா?

முதல் ஓவரில் அவர் வீசிய ஒவ்வொரு பந்தும் ஏன் மாலிங்க ஓய்வுபெறுகிறார்? என்ற கேள்வியை எமக்குள் ஏற்படுத்தியது. முதல் ஓவரை துள்ளியமாக வீசிய மாலிங்க, தனது ஐந்தாவது பந்தில் தனக்கே உரித்தான யோர்க்கர் பந்தின் மூலம் பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பாலை ஆட்டமிழக்கச் செய்தார். 

மாலிங்க தனது முதல் ஓவரில் எத்தனையோ தடவைகள் போல்ட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை தனது யோர்க்கர் பந்தால் ஆட்டமிழக்கச் செய்திருந்தாலும், அவருடைய இறுதிப் போட்டியென்பதால் இந்த விக்கெட்டுக்கான ஆரவாரம் மைதானத்தை அதிரச்செய்தது.

ஏற்கனவே தமிம் இக்பாலை போல்ட் முறையில் வீழ்த்தி ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு மாலிங்க எச்சரிக்கையை விடுத்திருக்க, இதன் தொடர்ச்சியாக சௌமியா சர்க்காரின் விக்கெட்டும் மாலிங்கவால் பதம் பார்க்கப்பட்டது. 

இப்படி விக்கெட்டுகளை பதம் பார்த்த இவர், கடந்தகால ஸ்லிங்கா மாலிங்கவை மீண்டும் எமக்கு ஞாபகப்படுத்தி சென்றார்.

T20 தலைவராக செயற்படுமாறு மாலிங்கவிடம் கோரிய கிரிக்கெட் சபை

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித்……

லஹிரு குமாரவும், லசித் மாலிங்கவும்

லசித் மாலிங்க எப்பொழுதும் தன்னுடைய அனுபவத்தை சக பந்துவீச்சாளர்களுடனும், வீரர்களுடனும் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றார். இதில், நேற்றைய போட்டியில் மாலிங்கவிடம் அதிகம் ஈர்க்கப்பட விடயம், இளம் வீரர்களுக்கு அடிக்கடி அறிவுறைகளை வழங்குவது.

அதில் முக்கியமாக இலங்கை அணியின் எதிர்கால வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் லஹிரு குமாரவுக்கு, மாலிங்க ஈடுபாட்டுடன் பந்துவீச்சு தொடர்பில் நேற்றைய தினம் அறிவுறை வழங்கியிருந்தார். 

பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, லஹிரு குமார, மஹ்மதுல்லாஹ்விற்கு பந்து வீசிக்கொண்டிருந்தார். இதன் போது, தேர்ட் மேன் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மாலிங்க, மிட்-ஒன் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட வனிது ஹசரங்கவை, தனது இடத்திற்கு வரவழைத்துவிட்டு, லஹிரு குமாரவின் அருகில் சென்றார். அருகில் சென்ற மாலிங்க, லஹிரு குமாரவிடம் சென்று பௌன்சர் பந்தினை வீசவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல லஹிரு குமார சிறந்த வேகத்துடன் கூடிய பௌன்சர் பந்தொன்றை வீச, தேர்ட் மேன் பகுதியில் இருந்த வனிது ஹசரங்கவிடம் பிடிகொடுத்து மஹ்மதுல்லாஹ் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பின் போது, லஹிரு குமார கொண்டாடியதை விடவும், அதிகமாக மாலிங்க கொண்டாடினார். அதுமாத்திரமின்றி லஹிரு குமாரவும் குறித்த விக்கெட்டை வீழ்த்திய பிறகு, மாலிங்கவுக்கு அந்த விக்கெட்டினை பரிசாக வழங்கும் வகையில் மரியாதையும் செலுத்தியிருந்தார்.

பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாலிங்க இதுதொடர்பில் குறிப்பிட்ட போது, “இளம் வீரர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் எவ்வகையான பந்துகளை வீசவேண்டும் என்ற விடயத்தை அனுபவ வீரராகிய நாம் கூறவேண்டும். அப்படி நான் ஒரு திட்டத்தை வகுத்து அதனை குமாரவிடம் கூறினேன். அதனை சிறப்பாக அவர் செய்துமுடித்தார். எமது திட்டம் அந்த நேரத்தில் வெற்றிபெற்றது” என்றார்.

“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்

இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க……..

இறுதிப் பந்திலும் சாதனை படைத்த மாலிங்க

ஒவ்வொரு  விளையாட்டிலும் சாதனைகள் பெறுவது என்பது இலகுவான விடயமல்ல. அதற்காக போராட வேண்டும். முயற்சி வேண்டும். இவற்றுடன் அதிர்ஷடமும் வேண்டும் என்ற அடிப்படையில், மாலிங்க இறுதிப் பந்தில் விக்கெட்டினை வீழ்த்தி இந்திய அணியின் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்தார்.

தனது முதல் பந்துவீச்சு பிரதியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய மாலிங்க, ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய 9ஆவது வீரர் இடத்தினை இந்திய அணியின் அனில் கும்ளேவுடன் பகிர்ந்துக்கொண்டார்.

பின்னர், இறுதி ஓவர்களை வீசுவதற்கு மாலிங்க மற்றும் நுவன் பிரதீப் இணைந்த போது, நுவன் பிரதீப் தன்னுடைய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, மாலிங்கவுக்கு மீதம் இருந்தது ஒரே ஒரு விக்கெட். குறித்த விக்கெட்டினை வீழ்த்தினால் கும்ப்ளேயின் சாதனையையும், ஒருநாள் கிரிக்கெட்டை விக்கெட்டுடன் நிறைவுசெய்யும் பெருமையையும் மாலிங்க பெற்றுக்கொள்வார்.

ஆனால், தன்னுடைய 9ஆவது ஓவரை வீசிய மாலிங்கவுக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பங்களாதேஷ் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை பாதுகாத்தனர். அடுத்து நுவன் பிரதீப்பின் பந்து ஓவர். குறித்த ஓவரிலும் மாலிங்கவின் அதிர்ஷடத்தால் விக்கெட் வீழ்த்தப்படவில்லை. மீண்டும் தனது இறுதி ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்ட மாலிங்க, இறுதி விக்கெட்டை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 338 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைபடைத்தார். அத்துடன், விக்கெட் ஒன்றுடன் தன்னுடைய ஒருநாள் போட்டி வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

இறுதியாக…

இலங்கை கிரிக்கெட்டின் மகத்துவத்தை சர்வதேசத்துக்கு கொண்டுசென்ற மாலிங்கவின் இந்த ஒருநாள் பயணமானது, இலங்கை ரசிகர்களாகிய எமது ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த ஞாபகங்களாகும். அவருடைய சாதனைகள் ஆகட்டும் அல்ல பெருமைகள் ஆகட்டும் அனைத்தும் மாலிங்கவுக்கு மாத்திரமல்ல. அவை எமது தாய் நாட்டுக்கும்தான்.

பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து…….

ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரருக்கு, நாம் பிரியாவிடை அளித்திருக்கிறோம். அதுவும் வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனுமான ஒரு பிரியாவிடை. இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு அணியின் ஒவ்வொரு வீரர்களும், இலங்கையின் ஒவ்வொரு இரசிகர்களுக்கும் பங்கிருக்கிறது. எமது அடையாளமான இந்த கிரிக்கெட் இன்னும் வளர வேண்டும்.

லசித் மாலிங்க போன்ற தனித்துவம் மிக்க ஒரு வீரரை எம்மால் உருவாக்க முடியாமல் போகலாம். ஆனால், திறமை இருக்கிறது எனவும் இலங்கை அணி உயர்ச்சி பெரும் என்பதையும் மாலிங்க தன்னுடைய பிரியாவிடை பேச்சில் மிகத் தெளிவாக கூறியிருந்தார். லசித் மாலிங்க என்ற கிரிக்கெட் ஜாம்பவானின் நம்பிக்கையும், இலங்கையர்களாகிய எமது நம்பிக்கையும் இலங்கை கிரிக்கெட்டை மென்மேலும் உயர்த்த வேண்டும் என்பதுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் சகாப்தம் படைத்த லசித் மாலிங்கவின் சேவைக்கு மனதால் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டியது ரசிகனாகிய எனது கடமையும் கூட.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<