லங்கன் அணிக்கு வலுச்சேர்த்த லக்‌ஷானின் அபார சதம்

206

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் நான்கு போட்டிகளின் 2ஆவது நாள் ஆட்டங்கள் இன்று (06) நிறைவுக்கு வந்தன.

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை அணிக்கு எதிரான போட்டியில் லக்‌ஷான் ரொட்ரிகோவின் சதத்தின் உதவியுடன் லங்கன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுக்கொள்ள, மறுபுறத்தில் லங்கன் அணியின் 7 விக்கெட்டுக்களை பாணந்துறை அணியின் சைனமன் பந்துவீச்சாளரான சுரேஷ் பீரிஸ் பதம் பார்த்தார்.

பாணந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி, நேற்றைய முதல் நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய லங்கன் அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இன்றைய 2ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. அவ்வணி சார்பாக அபாரமாக விளையாடிய வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லக்‌ஷான் ரொட்ரிகோ 96 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்

எனினும், பாணந்துறை அணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய இடதுகை சைனமன் சுழல் பந்துவீச்சாளரான சுரேஷ் பீரிஸ், 82 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

காலி அணிக்கு வலுச்சேர்த்த லசித் பெர்ணாந்துவின் சகலதுறை ஆட்டம்

இதனையடுத்து தமது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த பாணந்துறை அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, லங்கன் அணியை விட 157 ஓட்டங்களால் அவ்வணி முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (60.1) – காசிப் நவீத் 50, சகுரங்க பொன்சேகா 39, ரசிக பெர்ணாந்து 39, சுரேஷ் பீரிஸ் 31, வினோத் பெரேரா 23, நவீன் கவிகார 4/80, தினுஷ்க மாலன் 3/42, சானக ருவன்சிறி 2/31

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (53.4) – லக்‌ஷான் ரொட்ரிகோ 103, சானக ருவன்சிறி 48, சுரேஷ் பீரிஸ் 7/82, தனுஷிக பண்டார 3/92

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 208/4 (63) – சகுரங்க பொன்சேகா 75, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 58*, விஷ்வ சதுரங்க 44, நவீன் கவிகார 2/60


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

துலாஜ் உதயங்கவின் அபார சதம் மற்றும் சொஹான் ரங்கிகவின் 5 விக்கெட் உதவியினால் கடற்படை கழகத்துக்கு எதிரான போட்டியில் விமானப்படை அணி முன்னிலை பெற்றுக்கொண்டது.

வெலிசரை கடற்படை மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி 304 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக அணித் தலைவர் துலாஜ் உதயங்க 115 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், இன்றைய 2ஆவது நாளில் தொடர்ந்து விளையாடிய கடற்படை அணி, 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக மத்திய வரிசையில் அபாரமாக விளையாடிய புத்திக ஹசரங்க 93 ஓட்டங்களைப் பெற்று சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதில், பந்துவீச்சில் எதிரணியை மிரட்டிய விமானப்படையின் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான சொஹான் ரங்கிக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய விமானப்படை அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 304 (83.5) – துலாஜ் உதயங்க 115, ரவிந்து குணவர்தன 40*, சமிகர ஹேவகே 32, டி வீரரத்ன 21, தரூஷன் இத்தமல்கொட 4/39, சுதாரக தக்‌ஷின 3/68, நுவன் சம்பத் 2/33

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 285 (75.3) – புத்திக ஹசரங்க 93, குசல் எடுசூரிய 56, தரூஷ இத்தமல்கொட 42, இஷான் அபேசேகர 31, சொஹான் ரங்கிக 5/88, புத்திக சந்தருவன் 3/84

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 44/1 (18) – உதயவன்ச பராக்கிரம 33*


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி, காலி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய காலி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய ஹசந்த பெர்ணாந்து 65 ஓட்டங்களையும், லசித் பெர்ணாந்து 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

வர்த்தக நிறுவன அணியை வருடாந்த T20 கிரிக்கெட் போட்டியில் வீழ்த்திய ஊடகவியலாளர்கள்

இதன் போது பொலிஸ் அணி சார்பாக அபார பந்துவீச்சில் ஈடுபட்ட நிமேஷ் விமுக்தி 103 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர், 220 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பொலிஸ் அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அபாரமாக விளையாடிய தரிந்து டில்ஷான் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, காலி அணியைவிட 26 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பொலிஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 95 (28.3) – சமித் துஷாந்த 23, கயான் சிறிசோம 5/29, லசித் பெர்ணாந்து 5/29

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (107) – ஹசந்த பெர்ணாந்து 65, லசித் பெர்ணாந்து 64, தமித ஹுனுகும்புர 53, திலின மஸ்முல்ல 31, நிமேஷ் விமுக்தி 6/103

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 194/5 (55) – தரிந்து டில்ஷான் 64, நிமேஷ் விமுக்தி 44*, தினூஷ பெர்ணாந்து 41, சமித் துஷாந்த 23, கிரிஷான் அபேசூரிய 2/24


களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் அசத்திய குருநாகலை யூத் அணி, இன்னிங்ஸ் வெற்றியைப் பெறுவதற்காக விளையாடி வருகின்றது.

குருநாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் குருநாகலை யூத் அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இன்றைய 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

அவ்வணி சார்பாக பின்வரிசை வீரராகக் களமிறங்கி துடுப்பாட்டத்தில் அசத்திய சகலதுறை ஆட்டக்காரரான ருவந்த ஏகநாயக்க 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, 405 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட குருநாகலை அணி தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

லஹிரு திரிமான்னவினால் ராகம அணிக்கு மற்றொரு சதம்

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சைத் தொடங்கிய களுத்துறை நகர அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்படி, 236 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களுத்துறை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. அவ்வணி சார்பாக கீத் பெரேரா 86 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் குருநாகலை அணி சார்பாக கல்ஹான் சினெத் 3 விக்கெட்டுக்களையும், துசித் டி சொய்ஸா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405/9d (126) – தமித் பெரேரா 88, ருவந்த ஏகநாயக்க 72, தனுஷ்க தர்மசிறி 52, தரிந்து தசநாயக்க 46, சரித் மெண்டிஸ் 28, லக்‌ஷான் ஜயசிங்க 2/56, மதீஷ பெரேரா 2/101

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169/8 (52) – கீத் பெரேரா 86, கல்ஹான் சினெத் 3/44, துசித் டி சொய்ஸா 2/30