வர்த்தக நிறுவன அணியை வருடாந்த T20 கிரிக்கெட் போட்டியில் வீழ்த்திய ஊடகவியலாளர்கள்

86
 

ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய கிரிக்கெட் அணி, வர்த்தக நிறுவனங்களின் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக அங்கத்தவர்களைக் கொண்ட அணிக்கு எதிரான சினேகபூர்வ T-20 போட்டியில் 9 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

மூன்றாவது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டி சனிக்கிழமை (6) MCA மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

இப்போட்டியில் வர்த்தக நிறுவனங்களின் அணித் தரப்பை வர்த்தக நிறுவனங்களின் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரோஷன் இத்தமல்கொட தலைமை தாங்கியிருந்ததோடு, ஊடக அணித் தரப்பை முன்னணி ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான வழிநடாத்தியிருந்தார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த வர்த்தக நிறுவன அணித் தரப்பு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய ஊடகவியலாளர்கள் தரப்பு ஆரம்பத்திலேயே எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் சஞ்சய விஜேசிங்கவின் அபார பந்துவீச்சினால் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்ட ஊடகவியலாளர் அணியை ThePapare.com இன் கிரிக்கெட் பிரிவின் தலைவர் தமித் வீரசிங்க மற்றும் ரூபாவாஹினி நிறுவனத்தின் தர்ஷன மல்தெனிய ஆகியோர் மீட்டெடுத்தனர். இரண்டு வீரர்களும் ஊடகவியலாளர் அணியின் நான்காம் விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக வெறும் 73 பந்துகளில் 103 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

லஹிரு திரிமான்னவினால் ராகம அணிக்கு மற்றொரு சதம்

இடது கை துடுப்பாட்ட வீரரான தமித் வீரசிங்க 51 பந்துகளுக்கு 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களைக் குவித்ததோடு, மல்தெனிய 35 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.

இவர்களின் இணைப்பாட்டத்துடன் ரூபாவாஹினி நிறுவனத்தில் இருந்து வந்திருந்த மற்றுமொரு ஊடகவியலாளரான தினேஷ் உபேந்திரவின் அதிரடியோடு ஊடகவியலாளர் தரப்பு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது.

அரைச்சதம் விளாசிய தமித் வீரசிங்க

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய வர்த்தக நிறுவன தரப்பு பவர் பிளேயில் (Power Play) வெறும் 17 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. எனினும், பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த வசந்தலால் பெர்னாந்து அரைச் சதம் கடந்து போட்டியை விறுவிறுப்பாக்கியிருந்தார்.

எனினும் பந்து வீச்சில் எதிரணியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்கள் தரப்பு செயற்பட்டது. இதனால், 20 ஓவர்கள் நிறைவில் வர்த்தக நிறுவனங்கள் தரப்பு 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

ஊடகவியலாளர் அணியின் தரப்பில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) வலதுகை வேகப்பந்துவீச்சாளரான பிரியால் வீரசிங்க 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு மறுமுனையில் வசந்தலால் பெர்னாந்து 42 பந்துகளுக்கு 48 ஓட்டங்களினை வர்த்தக நிறுவன சங்க அணிக்காக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஊடகவியலாளர்கள் அணி – 171/4 (20) – தமித் வீரசிங்க 67, தர்ஷன மல்தெனிய 35*, தினேஷ் உபேந்திர 37*, சஞ்சய விஜேயசிங்க 2/17

வர்த்தக நிறுவனங்கள் கிரிக்கெட் சங்க அணி – 162/8 (20) – வசந்தலால் பெர்னாந்து 58, லசந்த ஐயவர்த்தன 30, பிரியால் வீரசிங்க 5/29, சமீர பீரிஸ் 2/28

முடிவு – ஊடகவியலாளர்கள் தரப்பு 9 விக்கெட்டுக்களால் வெற்றி

 

விருதுகள் பெற்றோர்

சிறந்த துடுப்பாட்ட வீரர் – வசந்தலால் பெர்னாந்து

சிறந்த பந்துவீச்சாளர் – பிரியால் வீரசிங்க

போட்டியின் ஆட்ட நாயகன் – தமித் வீரசிங்க