இலங்கை மகளிர் அணிக்கெதிரான டி20 தொடரும் மேற்கிந்திய தீவுகள் வசம்

168

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இடையிலான 2ஆவது டி20 போட்டி அண்டிகுவாவிலுள்ள ஸ்டேன்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் 47 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை  தன்வசப்படுத்தியது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் அதிரடியாக ஆடிய ஸ்டெப்னி டெய்லர் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 49 ஓட்டங்களைப் பெற்றதுடன் டீன்றா டொட்டின் 29 ஓட்டங்களையும் பிரிட்னி கூபர் மற்றும் கைசியா நைட் ஆகியோர் தலா 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் இறுதி நேரத்தில் வந்த கைசொனா நைட் 7 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 2 விக்கெட்டுகளையும் ஸ்ரீபாளி வீரக்கொடி, சந்திமா குணரத்ன மற்றும் அமா காஞ்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

155 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இலங்கை மகளிர் அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரி அட்டபத்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இது தவிர யசோதா மென்டிஸ் 22 ஓட்டங்களையும் ரெபேக்கா வேண்டோர்ட் 14 ஓட்டங்களையும் டிலானி மனோதரா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

மிகச் சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆபி ப்ளச்சர் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஹெய்லி மெத்திவ்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சிறபாட்டக்காரராக ஆபி ப்ளச்சர் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி – 154/6 (20) – ஸ்டெப்னி டெய்லர் 49, டீன்றா டொட்டின் 29, பிரிட்னி கூபர் 23, கைசியா நைட் 23, கைசொனா நைட் 19, இனோகா ரணவீர 2/47, ஸ்ரீபாளி வீரக்கொடி 1/10,  சந்திமா குணரத்ன 1/20, அமா காஞ்சனா 1/27

இலங்கை மகளிர் அணி – 107 (19.4) – சமரி அட்டபத்து 30, யசோதா மென்டிஸ் 22, ரெபேக்கா வேண்டோர்ட் 14, டிலானி மனோதரா 11, ஆபி ப்ளச்சர் 5/12, ஹெய்லி மெத்திவ்ஸ் 2/25         

முடிவு – மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வெற்றி

Scorecard