மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித், துஷ்மந்த

2094

காயங்களால் அவதிப்பட்டு வந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய இருவரும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தெரிவுக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

Newswire இணையத்தளத்தில் ஒளிபரப்பாகிய ‘Sanath Show’ நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு வழங்கிய நேர்காணலில் வைத்து குசல் மற்றும் துஷ்மந்த சமீரவின் உபாதைகளின் தற்போதைய நிலை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “குசல் பெரேரா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குசல் ஜனித் மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய இருவரும் இந்த நாட்களில் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் இருவரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராக உள்ளனர்

இலங்கை அணியில் இடம்பிடிக்க அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், அவர் நிச்சயமாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவார்” என தெரிவித்தார்.

அத்துடன், அவர் தற்போது சில உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவதாகவும், தோள்பட்டை அறுவை சிகிச்சையில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் – ஜுலை மாதங்களில் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தோள்பட்டையில் நீண்ட காலமாக இருந்து வந்த உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்து கொண்டார்.

இதனிடையே, துஷ்மந்த சமீரவின் உபாதையின் தற்போதைய நிலை தொடர்பில் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து தெரிவிக்கையில், “வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவும் உபாதையில் இருந்து குணமடைந்து தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். எனவே, நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அவர் இடம்பெறுவார்.

துஷ்மந்த சமீர அணிக்கு திரும்பியவுடன், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு துறை இன்னும் பலமடையும் என்பதைப் போல, எமது பந்துவீச்சு தாக்குதல் இன்னும் மேம்படும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்

அண்மைக் காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கின்ற துஷ்மந்த சமீர, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடனான முதல் சுற்று 2ஆவது போட்டியின் போது உபாதைக்குள்ளாகினார். இதனையடுத்து அவருக்கு அவுஸ்திரேலியாவில் வைத்து சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<