மீண்டும் பிற்போடப்படும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்!

211

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை  மீள் திருத்தம் செய்ய வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரியுள்ளது. 

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொடருக்காக புதிய கோரிக்கைகளை விடுக்கும் பங்களாதேஷ்

இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் (27) இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த அணி வீரர் அபூ ஜயட்டுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்ட காரணத்தால், வீரர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, குறிப்பிட்ட தினத்தில் இலங்கையை வந்தடைய முடியாத நிலைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தள்ளப்பட்டது.

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹாசன் கருத்து வெளியிடுகையில், 

“நாம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் தொடரை மீள் அட்டவணைப்படுத்துமாறு கேட்டுள்ளோம். காரணம், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கடைப்பிடிக்கும் பட்சத்தில் எம்மால் தொடரில் விளையாட முடியாது. எனவே, இந்தநிலைமை சரியாகும் போது, தொடரை ஏற்பாடு செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளோம்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “அதேநேரம், இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் கொவிட்-19 விதிமுறைகளுக்கு ஏற்ப ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போன்ற தொடரை விளையாட முடியாது. இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இந்த தொடரை நடத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.  அவர்கள், எமது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை மாத்திரம் குறைக்கவில்லை” என சுட்டிக்காட்டினார்.

Video – விராட் கோலி செய்த தவறு என்ன? | Cricket Galatta Epi 37

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை என்பன தனிமைப்படுத்தல் விதிமுறைகளால் முரண்பட்டுவந்த நிலையில், தற்போது தொடர் பிற்போடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. அதேநேரம், குறித்த இந்த தொடர் பிற்போடப்படவுள்ளதென்ற தகவலும் எமது Thepapare.com இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறிப்பாக, கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவிருந்த இந்த தொடர், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஒக்டோபர் 24ம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த தொடர் இரண்டாவது முறையாக பிற்போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<