கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார

407

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டின் விதிமுறைகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழக (MCC) தலைவராக மாறி கிரிக்கெட்டுக்குப் பின்னரான தனது வாழ்க்கையிலும் சாதனைப் பயணத்தைத் தொடர்கின்றார்.  

பிரபல வீரர்கள் பங்கேற்கும் டி10 தொடர் அடுத்த வாரம் ஆரம்பம்

இந்நிலையில் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடும் போது என்னென்ன சாதனைகள் செய்திருந்தார் என்பதை ஒரு முறை நோக்குவோம். இங்கு அவரது அனைத்து சாதனைகளும் இல்லை. 

குமார் சங்கக்கார தனது கிரிக்கெட் வாழ்வில் மேற்கொண்ட சாதனைளை இரண்டு வகையாக பார்க்க முடியும். 

  1. துடுப்பாட்ட சாதனைகள் 
  2. விக்கெட்காப்பு சாதனைகள்

துடுப்பாட்ட சாதனைகள் 

குமார் சங்கக்கார அனைத்து வகைப் போட்டிகளிலும் சாதனைகள் செய்திருப்பதால் அவரின் சாதனைகளை துடுப்பாட்ட சாதனைகளை ஒவ்வொரு வகைப் போட்டிகளின் அடிப்படையிலும் பார்ப்போம்.  

டெஸ்ட் சாதனைகள்

கடந்த 2000ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி மூலம் காலியில் வைத்து சங்கக்கார டெஸ்ட் அறிமுகத்தினைப் பெற்றுக் கொண்டார். தனது கன்னிப் போட்டியில் வெறும் 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற, குமார் சங்கக்கார 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறும் போது, மொத்தமாக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ஓட்டங்களை குவித்திருந்தார். 

சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட 12,400 ஓட்டங்கள் இலங்கை அணி சார்பாக, அவரை டெஸ்ட் போட்டிகளில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற்றியிருக்கின்றது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் வரிசையில் குமார் சங்கக்கார ஆறாம் இடத்தில் காணப்படுகின்றார். 

இதேநேரம் ஆசிய வீரர்கள் என வரும் போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட் ஆகியோருக்குப் பின்னர் குமார் சங்கக்கார மூன்றாம் இடத்தில் இருப்பதோடு, இடதுகை துடுப்பாட்ட வீரராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் சங்கக்கார இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.  

தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன

இதேநேரம் குமார் சங்கக்கார தனது டெஸ்ட் வாழ்க்கையில் 41 டெஸ்ட் சதங்களைப் பெற்றிருக்கின்றார். இதன் மூலம் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்றிருக்கும் அவர், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்களைப் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றதோடு, இடதுகை துடுப்பாட்ட வீரராக அதிக டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

குமார் சங்கக்கார, இரட்டைச்சதங்களிலும் சாதனை செய்த துடுப்பாட்ட வீரராக இருக்கின்றார். மொத்தமாக 11 இரட்டைச்சதங்களினைப் பெற்றிருக்கும் சங்கக்கார கிரிக்கெட் உலகு இனம்கண்ட மிகச்சிறந்த துடுப்பாட்டவீரரான டொன் பிரட்மனிற்குப் (12) பின்னர் டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டைச்சதங்களை பெற்ற வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அரைச்சதங்களை நோக்கும் போது டெஸ்ட் போட்டிகளில், 52 அரைச்சதங்களைப் பெற்றிருக்கும் சங்கக்கார, 90 தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டிகளில் குமார் சங்கக்காரவின் துடுப்பாட்ட சராசரி 57.40 ஆகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் அவர் அதிக சராசரியினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   

சதங்கள், அரைச்சதங்கள் ஒரு பக்கமிருக்க குமார் சங்கக்கார தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற துடுப்பாட்ட வீரராகவும் சாதனை ஒன்றை செய்திருக்கின்றார்.

இது ஒருபக்கமிருக்க குமார் சங்கக்காரவே டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8000 (152), 9000 (172), 10000 (195), 11000 (208), 12000 (224) ஓட்டங்களை கடந்த வீரராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

கடந்த 2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்த்தனவுடன் இணைந்து மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 624 ஓட்டங்களைப் பகிர்ந்த குமார் சங்கக்கார, டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் விக்கெட் ஒன்றுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். இதோடு, இந்த இணைப்பாட்டம் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 600 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டம் பெறப்பட்ட ஒரேயொரு சம்பவமாகவும் பதிவாகுகின்றது.  

இன்னும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய குமார் சங்கக்கார, குறித்த இலக்கத்தில் அதிக சதங்கள் (37) பெற்ற வீரராக சாதனை செய்திருப்பதோடு, குறித்த இலக்கத்தில் துடுப்பாடி அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிச் சாதனைகள்

குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அதே 2000ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகம் பெற்றிருந்தார். உண்மையில், குமார் சங்கக்காரவிற்கு 2000ஆம் ஆண்டு காலியில் வைத்து இடம்பெற்ற பாகிஸ்தான்  அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியே முதல் சர்வதேசப் போட்டியாக இருந்தது.  

இலங்கை அணி பரிசளித்த மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகள்

ஒருநாள் போட்டிகளில் ஆரம்ப காலங்களில் மத்திய வரிசையில் துடுப்பாடிய குமார் சங்கக்கார, இதுவரை 404 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கின்றார். இதன் மூலம், குமார் சங்கக்கார அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் காணப்படுகின்றார். 

இதேநேரம், ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 14,234 ஓட்டங்களை குவித்திருக்கும் அவர் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் கூடிய ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரிற்கு (18,426) அடுத்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காகவும் அதிக ஓட்டங்களைக் குவித்திருக்கும் சங்கக்கார, இடதுகை துடுப்பாட்ட வீரராக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக இருக்கின்றார்.  

குமார் சங்கக்கார ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மொத்தமாக 25 சதங்கள் பெற்றிருப்பதோடு, 93 அரைச்சதங்களினையும் பூர்த்தி செய்திருக்கின்றார். இதேவேளை குமார் சங்கக்கார, இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக அரைச்சதம் கடந்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் சதம் பெற்ற ஒரேயொரு வீரராகவும் குமார் சங்கக்கார இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கக்கார இந்த சாதனையை 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் வைத்து நிகழ்த்தியிருந்தார். இன்னும், கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிவேக சதத்தினை (70) பதிவு செய்த துடுப்பாட்டவீரராகவும் குமார் சங்கக்காரவே இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரராக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை (13,392) குவித்த வீரராகவும் இருக்கும் குமார் சங்கக்கார, ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லை கடந்த முதல் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

T20 சாதனைகள்

T20 சர்வதேச போட்டிகளில் குமார் சங்கக்கார அதிக காலத்திற்கு விளையாடாது போனாலும், T20 போட்டிகளிலும் குமார் சங்கக்கார சாதனைகளைச் செய்யத் தவறவில்லை. 

அந்தவகையில், டெஸ்ட் போட்டிகள் போன்று T20 சர்வதேசப் போட்டிகளில் விக்கெட் ஒன்றுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தை (166) குமார் சங்கக்கார கடந்த 2010ஆம் ஆண்டு மஹேல ஜயவர்த்தனவுடன் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மோதலில் 2ஆம் விக்கெட்டுக்காக பதிவு செய்திருந்தார். 

இதேநேரம், வெவ்வேறு T20 உலகக் கிண்ணத் தொடர்களின் (2009, 2014) இறுதிப் போட்டியில் அரைச்சதம் பெற்ற வீரராகவும் குமார் சங்கக்கார இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சர்வதேசப் போட்டிகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நோக்கும் போது 2014ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் 2,868 ஓட்டங்களை குவித்த குமார் சங்கக்கார குறிப்பிட்ட ஆண்டு ஒன்றில் அதிக ஓட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரராக சாதனை செய்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரிற்கு அடுத்து குமார் சங்கக்காரவே (28,016) காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விக்கெட் காப்பு சாதனைகள்

குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தில் எப்படி சாதனைகளைச் செய்தாரோ அதே போன்று அவரது விக்கெட்காப்பிலும் சாதனைகள் பதிவாகியிருக்கின்றன. டெஸ்ட் போட்டிகளில் சங்கக்கார நீண்ட நாட்களுக்கு விக்கெட் காப்பாளராக இருக்காது போனாலும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தான் விளையாடும் காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான விக்கெட் காப்பாளராக குமார் சங்கக்காரவே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

அதன்படி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புக்கள் (482) இடம்பெறக் காரணமான விக்கெட் காப்பாளராக குமார் சங்கக்காரவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில், ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகளை (99) மேற்கொண்ட விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் குமார் சங்கக்கார இரண்டாம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

அதேவேளை, கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புக்கள் (54) நடைபெறக் காரணமாக இருந்த விக்கெட் காப்பாளராகவும் குமார் சங்கக்காரவே இருப்பது குறிப்பிடத்தக்கது.   

குமார் சங்கக்காரவின் இந்த சாதனைகள் யாராவது கிரிக்கெட் வீரர் மூலம் தகர்க்கப்படுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<