டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் திட்டத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ICC) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ஒன்பது அணிகள் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் சொந்த மண்ணில் மூன்று தொடர்கள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று தொடர்கள் என ஆறு தொடர்களில் ஆடவுள்ளன. இதன் இறுதிக் கட்டமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஒன்று நடைபெறும்.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு
தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீளக்கொண்டு வரும் நோக்கோடு..
மறுபுறம் 2021ஆம் ஆண்டு தொடக்கம் 13 அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் லீக் போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இது உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளாகவும் பயன்படும்.
பரீட்சாத்தமாக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை நடாத்தவும் ICC அனுமதி அளித்துள்ளது. இந்த பருவத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் பரீட்சாத்த நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
ICC குழுக் கூட்டம் நியூசிலாந்தின், ஒக்லாந்து நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றபோது சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இது பற்றி ICC நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் கூறியதாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்காலத்தில் நிலைபெறச் செய்ய மாற்று வழிகள் மற்றும் பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபட நாம் அவதானம் செலுத்தினோம்” என்றார்.
டெஸ்ட் சம்பியன்ஷிப் எவ்வாறு?
இந்த டெஸ்ட் போட்டித் தொடர் 2019 உலகக் கிண்ண போட்டிக்கு பின்னரே ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் ஆர்வத்தை அதிகரிக்கவும் ஒருபக்க போட்டிகளாக இருப்பதை தவிர்க்கும் முயற்சியாகவுமே இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இந்த அனைத்து போட்டிகளும் ஐந்து நாட்கள் கொண்டதாக இருக்கும் என்பதோடு இந்த தொடர்கள் ஆஷஸ் போன்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடராகவும் அமையலாம்.
இதில் முதலிரு இடங்களை பிடிக்கும் இரு அணிகள் 2021 ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் விளையாடவுள்ளது.
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஆரம்ப டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் இடம்பெறவில்லை. எனினும் அறிமுகப்படுத்தப்படும் நான்கு நாள் டெஸ்ட் தொடர்கள் இந்த அணிகளுக்கு மேலும் டெஸ்ட் அனுபவத்தை பெற வாய்ப்பாக இருக்கும்.
டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பது பல ஆண்டுகளாக ஆலோசிக்கப்படும் ஒன்று என்று கடந்த ஆண்டு ரிச்சட்சன் கூறி இருந்தார். முன்னதாக டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சாத்த நான்கு நாள் டெஸ்ட்
இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் அடுத்த உலகக் கிண்ணப் போட்டி வரை பரீட்சாத்த நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் தொடரவுள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் தென்னாபிரிக்கா அதற்கு முன் வரும் டிசம்பர் மாதத்தில் ஜிம்பாப்வேயுடன் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஆட அண்மையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்தில சொதப்பிய இலங்கை மகளிர் அணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியதீவுகள் மகளிர்…
இதன்படி தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியை நடாத்த ஒக்லாந்தில் கூடிய ICC குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் இந்த இரு அணிகளும் டிசம்பர் 26இல் பொக்சின் டே டெஸ்டாக நான்கு நாள் டெஸ்டில் முதல் முறையாக ஆடவுள்ளது.
“டெஸ்ட் விளையாடும் புதிய அணிகளுக்கு நான்கு நாள் டெஸ்ட் நீண்ட போட்டிகளில் அதிக வாய்ப்புகளை வழங்கும். இது அந்த அணிகளுக்கு தனது திறமையை வளர்த்துக்கொள்ளவும் முன்னணி ஒன்பது அணிகளுடனான இடைவெளியை குறைக்கவும் உதவும்” என்றும் டேவிட் ரிச்சட்சன் குறிப்பிட்டார்.
ஒரு நாள் லீக், அணிகளை எவ்வாறு பாதிக்கும்?
தற்போது ஒருநாள் தரவரிசையில் முதல் ஏழு இடங்களில் இருக்கும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். அதற்கு கீழ் நிலையில் உள்ள அணிகளுக்கே தகுதிகாண் போட்டிகள் நடைபெறுகின்றன.
எனினும், அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய லீக் முறையில் முதல் 13 இடங்களில் இருக்கும் அணிகள் மூன்று ஆண்டு காலப்பகுதியில் எட்டு போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளன.
“இரு தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்களில் கட்டமைப்பை கொண்டுவருவது புதிய சவாலல்ல. ஆனால் இம்முறை நியாயமான தீர்வொன்றுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது” என்று ICC தலைவர் ஷேஷான்க் மனோஹர் குறிப்பிட்டார்.
ஒரு நாள் லீக் தொடர், 2023ஆம் அண்டு இடம்பெறும் உலகக் கிண்ண போட்டிக்கான நேரடித் தகுதிக்கு பயன்படவுள்ளது. இதன் முதல் பாகத்தில் 12 முழு அங்கத்துவ நாடுகள் சொந்த மண்ணில் நான்கு தொடர்கள் மற்றும் வெளிநாடுகளில் நான்கு தொடர்களில் விளையாடும். ஒவ்வொரு தொடரும் மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்டதாக அமையவுள்ளன.
இதில் இணை அங்கத்துவ அணி ஒன்றும் இணையும். ICC உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் போட்டி மூலமே அந்த அணி தேர்வாகும். அதாவது கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப்பை வெல்லும் அணி ஒருநாள் லீக்கிற்கு தகுதிபெற முடியும். இதன்மூலம் அந்த அணிக்கும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த ஒரு நாள் லீக்கின் முதல் பத்து இடங்களை பெறும் அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.
எனினும் ஒருநாள் லீக் போட்களுக்கான புள்ளி வழங்கு முறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.