ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்

England Tour India 2024

135
Ashwin withdraws from Rajkot Test

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிசந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) நேற்று (16) இரவு தெரிவித்துள்ளது. 

இந்தியாஇங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 445 ஓட்டங்களைக் குவித்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களை எடுத்துள்ளது. 

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500ஆவது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுக்கொண்டார் 

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளே, நெதன் லையன் போன்ற சுழல்;பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீரென விலகியுள்ளார். குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக அவர் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதுதொடர்பில் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் சபையும், (பிசிசிஐ) இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது 

இந்த சவாலான நேரத்தில் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும்போது அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பிசிசிஐ கோருகிறது. அத்துடன், பிசிசிஐ மற்றும் இந்திய அணியும் அஸ்வினுக்குத் தேவையான எந்த உதவியையும் தொடர்ந்து அளிக்கும் என்றும் அவருடன் தொடர்பில் இருக்கும் என கூறியுள்ளது. 

அஸ்வினின் தாயார் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். அவர் ராஜ்கோட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்நேரத்தில் அவரது தாயாருடன் இருக்க சென்னை திரும்பியுள்ளார்என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அஸ்வின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் கடைசி 3 நாட்களில் 10 வீரர்கள் மற்றும் 1 மாற்று வீரருடன் இந்தியா விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<