60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 32ஆவது போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி முரளி விஜெய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. ஆரம்பத்தில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் முரளி விஜெய் முதலில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி நயிட் ரைடர்ஸ அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கம்பீர், உத்தப்பா ஜோடி விக்கெட்டை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி 13.3 ஓவர்களில் முதல் விக்கட்டுக்காக 101 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

45 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்று இருந்த கம்பீர் ரன் அவுட் முறை மூலம் ஆட்டம் இழந்தார்.  அதேபோல் மறுமுனையில் ஜொலித்த உத்தப்பா 49 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட் முறை மூலம் ஆட்டம் இழந்தார்.

இறுதிக் கட்டத்தில் ரசலும், யூசுப் பதானும் அதிரடியாக ஆட முயற்சித்தாலும், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ரசலும் சந்திப் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன் மூலம் கொல்கத்தாவின் மூன்று விக்கட்டுகளும் ரன் அவுட் முறையில் விழ்த்தப்பட்டது. இறுதியில் நயிட் ரைடர்ஸ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

பிறகு 165 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியான தொடக்கம் காத்திருந்தது. 3.1 ஓவர்களில் முதல் மூன்று விக்கட்டுகளையும் இழந்து திணறியது. முரளி விஜெய் 06 ஓட்டங்க்ளோடும் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மனன் வோஹ்ரா ஆகியோர் ஓட்டங்கள் எதையும் பெறாமலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதன் பிறகு களமிறங்கிய சஹாவும், மெக்ஸ்வெல்லும் பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நீடிக்கவில்லை. சஹா 24 ஓட்டங்களைப் பெற்று சவ்லா வீசிய பந்தில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்த மெக்ஸ்வெல் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்று களத்தைவிட்டு வெளியேறினார். இதனால் போட்டியின் போக்கு கொல்கத்தா பக்கம் சாய்ந்தது.

இறுதியில் களமிறங்கிய அக்‌ஷர் படேல் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களை விளாசினாலும் பஞ்சாப் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று 07 ஓட்டங்களால் நயிட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் என்டர் ரசல் 4 விக்கட்டுகளையும் பியுஷ் சவ்லா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் என்டர் ரசல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்