“ஆசியக்கிண்ணத்தை வென்று புதிய பயணத்தை தொடருவோம்” – பியால் விஜேதுங்க

Asia Cup 2022

184

ஆசியக்கிண்ணத்தை வென்று, தங்களுடைய புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி ஆசியக்கிண்ணத்தில் இன்றைய தினம் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் அதேநேரம், இறுதிப்போட்டியிலும் இதே அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) எதிர்கொள்ளவுள்ளது.

அசிப் அலி, பரீட் ஆகியோருக்கு அபாராதம் விதித்த ஐசிசி!

இலங்கை கிரிக்கெட் அணி 2014ம் ஆண்டுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. எனவே, இம்முறை ஆசியக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் மேற்கொண்ட பயணம், தற்போது கிண்ணத்தை வெல்வதை நோக்கிச் சென்றுள்ளதாக பியால் விஜேதுங்க குறிப்பிட்டார்.

“நாம் தொடருக்கு வரும்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறவேண்டும் என நினைத்தோம். தற்போது இறுதிப்போட்டியில் இருக்கிறோம்.  இப்போது கிண்ணத்தை வென்று, புதிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்ற புதிய எதிர்பார்ப்பு எம்மிடம் ஏற்பட்டுள்ளது.

நாம் 2014ம் ஆண்டுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத்தை வென்றதில்லை. அதற்கு முன்னர் 5 தடவைகள் கிண்ணத்தை வென்றிருந்தோம்.  2014ம் ஆண்டுவரை நாம் வெற்றிகரமான அணியாக இருந்தோம். அதன்பின்னர் கடந்த 8 வருடங்களாக பின்னடைவை சந்தித்தோம். ஆனால், இப்போது இந்த தொடரை வென்று புதிய பயணத்தை தொடர எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதேவேளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியினை பதிவுசெய்வது எவ்வளவு சவாலான விடயம் என்பது தொடர்பிலும் இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். “பாகிஸ்தான் மிக பலமான அணி. நாம் எதிரணிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை. எமது ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணுகிறோம்.

எம்மால் கட்டுப்படுத்தமுடிந்த விடயங்களை மாத்திரமே எம்மால் கட்டுப்படுத்த முடியும். பாகிஸ்தான் கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றது. நாமும் வெற்றிபெற்றிருக்கிறோம். எனவே, இரண்டு அணிகளும் சமபலமாக உள்ளன. குறித்த நாளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி வெற்றிபெறும்” என குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்த தருணத்துக்காக இலங்கை அணி நீண்ட நாட்கள் காத்திருந்தது. இதுவோரு மிகச்சிறந்த வெற்றி என்பதுடன், தொடரில் வெற்றிபெற்றால் அணி மற்றும் நாட்டு மக்களுக்கும் இது மிகப்பெரிய அம்சமாக மாறும் என பியால் விஜேதுங்க சுட்டிக்காட்டினார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<