கீகன் பீட்டர்சன்னுக்கு கொரோனா; சுபைர் ஹம்ஸா தென்னாபிரிக்க குழாமில்

121

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கீகன் பீட்டர்சன்னுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 17 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ் போட்டி பெப்ரவரி 25 ஆம் திகதியும் கிரைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான டீன் எல்கர் தலைமையிலான 17 பேர் கொண்ட தென்னாபிரிக்க குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்னாபிரிக்க குழாத்தில் இடம்பிடித்திருந்த இளம் வீரர் கீகன் பீட்டர்சன்னுக்கு இன்று (02) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், அதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மருத்துவ கண்காணிப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த 28 வயதான கீகன் பீட்டர்சன், அந்த அணிக்கு

டெஸ்ட் தொடரை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததுடன், தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய கீகன் பீட்டர்சன்னுக்குப் பதிலாக சுபைர் ஹம்ஸாவை இணைத்துக்கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

26 வயதான சுபைர் ஹம்ஸா, 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று, கடந்த ஆண்டு நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.

தென்னாபிரிக்க அணி – டீன் எல்கர் (அணித்தலைவர்), டெம்பா பவுமா, சரேல் எர்வீ, சுபைர் ஹம்ஸா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டுவானே ஒலிவியர், ககிசோ ரபாடா, ரையன் ரிக்கல்டன், லூத்தோ சிபம்லா, கிளென்டன் ஸ்டூர்மேன், ரஸ்ஸி வென் டர் டசென், கைல் வெர்ரைன்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<