மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற எட்டாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரில் சிறப்பித்த வீரர்களைக் கொண்ட சம்பியன்ஸ் கிண்ண பதினொருவர் அணியின் வீரர்கள் விபரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அணியை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இணைந்து தெரிவு செய்துள்ளனர்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படுமா?

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் அவர்களின்..

தொடரில் அதிக ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக, இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் இருந்தே அதிகமான வீரர்கள் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மிகவும் மோசமாக செயற்பட்டு வந்தமையினால் பாகிஸ்தான் அணி குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனினும், இத்தொடரில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பு என அனைத்திலும் சிறந்த முறையில் செயற்பட்ட பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் பலம் மிக்க இந்தியாவை விழுத்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்கு அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமடுக்கு உண்டு. துடுப்பாட்டம், விக்கெட் காப்பு என்பவற்றில் தனது தனிப்பட்ட திறமையைக் காண்பித்தது மாத்திரமன்றி, அணியையும் அவர் சிறந்த முறையில் வழிநடாத்தியிருந்தார். இதன் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண பதினொருவர் அணியின் தலைவராக சர்ப்ராஸ் தெரிவாகியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக துடுப்பாட்டத்தில் சிறப்பித்து, இறுதிப் போட்டியின் சதம் உட்பட தொடரில் மொத்தமாக 252 ஓட்டங்களைப் பெற்ற பக்ஹர் சமான் இவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீர்ராக உள்ளார்.

இவருடன் இணைந்த அடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இந்திய வீரர் ஷிகர் தவானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தவான், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச் சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 338 ஓட்டங்களைப் பெற்று தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீர்ராக உள்ளார்.  

தொடரில் அரையிறுதிவரை முன்னேறியிருந்த பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் இவ்வணியில் உள்வாங்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் ஒரே வீரராக உள்ளார். இவரும் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச் சதங்களுடன் 293 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தமது அணிகளின் மத்திய வரிசையைப் பலப்படுத்திய வீரர்களான இந்திய அணித் தலைவர் விராட் கோலி (258), இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட் (258), சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் இந்த அணியிலும் பலமான மத்தியதர வரிசை வீரர்களாக உள்ளனர்.

இதில் வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான பென் ஸ்டோக்ஸ் 184 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சர்ப்ராஸ் 76 ஓட்டங்களைப் பெற்றுள்ள அதேவேளை, 9 ஆட்டமிழப்புக்களை மேற்கொண்டுள்ளார்.  

இந்தியாவை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்த பாகிஸ்தான்

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்..

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் ஜுனைட் கான் மற்றும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் புவ்னேஷ்வர் குமார் ஆகியோர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக அங்கம் வகிக்கின்றனர்.  

அது போன்றே இத்தொடரில் மிகவும் அச்சுறுத்தல் மிக்க பந்து வீச்சாளராகக் கருதப்பட்ட பாகிஸ்தான் அணியின் 23 வயது வீரர் ஹசன் அலி, இவ்வணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரான இவர், 5 இன்னிங்சுகளில் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் இறுதிப் போட்டியில் பெற்ற 3 விக்கெட்டுகளும் உள்ளடங்கும்.

அவருடன், அடுத்த சுற்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷிட் உள்ளார். இவர், தொடரில் 3 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 7 விக்கெட்டுகளைப் பதம் பார்த்திருந்தார்.

இந்த வீரர்களுக்கு மேலதிகமாக குறித்த அணியில் 12ஆவது வீரராக நியுஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மொத்தமாக 244 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

எனினும், இவ்வணியில் எந்தவொரு இலங்கை வீரரும் உள்வாங்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள அணி விபரம்  

  1. சர்ப்ராஸ் அஹமட் (அணித் தலைவர், விக்கெட் காப்பாளர்)  
  2. பக்ஹர் சமான்
  3. ஷிகர் தவான்
  4. தமிம் இக்பால்
  5. விராட் கோலி
  6. ஜோ ரூட்
  7. பென் ஸ்டோக்ஸ்
  8. ஆதில் ரஷிட்
  9. ஜுனைட் கான்
  10. புவ்னேஷ்வர் குமார்
  11. ஹசன் அலி
  12. கேன் வில்லியம்சன்

குறித்த அணி தொடர்பிலான உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்