சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

121
PSL

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரில் கராச்சியில் நடைபெறுகின்ற போட்டிகளில் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் 7 ஆவது அத்தியாயம் இன்று (27) கராச்சி தேசிய மைதானத்தில் ஆரம்பமாகியது.

இம்முறை போட்டித் தொடரில் குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக சஹீட் அப்ரிடி விளையாடுகிறார். அத்துடன், இம்முறை பாகிஸ்தான் சுபர் லீக் தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணியுடன் இணைவதற்கு முன் சஹீட் அப்ரிடி, நேற்று (26) பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அப்ரிடி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டின் ICC இன் சிறந்த T20 வீரரானார் ரிஸ்வான்

இதன்படி, 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் எதிர்மறையான முடிவு கிடைத்ததும் அவர் குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சஹீட் அப்ரிடி, குவாட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் நான்கு போட்டிகளை தவறவிடுகின்றார்.

இதேவேளை, இந்த ஆண்டு பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் ஆரம்பமாவதற்கு முன் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.

இதில் கராச்சி கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழாத்தில் உள்ள வசீம் அக்ரம், பெஷாவர் ஷல்மி அணியின் வஹாப் ரியாஸ் மற்றும் ஹைதர் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<