நிதர்ஷனின் போட்டிச் சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 7 பதக்கங்கள்

Junior National Athletics Championships 2023

111
Junior National Athletics Championship 2023

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 4 நாட்களாக தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் புதன்கிழமை (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் மொத்தமாக 17 புதிய போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 11 புதிய சாதனைகளும், பெண்கள் பிரிவில் 6 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி வீரர்களான எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான தட்டெறிதலிலும், அண்டனி விமலதாஸ் நிதர்ஷன் சம்மட்டி எறிதலிலும் புதிய போட்டிச் சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் சகல வயதுப் பிரிவுகளுக்குமான அதிசிறந்த வீரருக்கான இலங்கை மெய்வல்லுனர் சங்க தலைவர் கிண்ணத்தை கஹவத்தை மத்திய கல்லூரி வீரர் கே.வி மலித் யசிறு வென்றெடுத்தார்.

20 வயதின்கீழ் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 15.89 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டியதன் மூலம் அதிகூடிய தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த வீரராக மலித் யசிறு தெரிவானார்.

இதுதவிர, 16, 18, 20, 23 ஆகிய வயதுப் பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு சவால் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களைக் குவித்தனர்.

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 4ஆவதும், இறுதியும் நாளான புதன்கிழமை (04) நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்மட்டி எறிதல் போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர்.

இதில் 18 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் பங்குகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரி வீரர் அண்டனி விமலதாஸ் நிதர்ஷன் 35.19 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு அதே பாடசாலையைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 32.85 மீட்டர் தூரத்தை எறிந்து நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதே கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜா சுன்ஜெய் 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (30.91 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், உமாஹரன் தருண் 16 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (31.60 மீட்டர்), வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி வீரர்கள் 4 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

இதில் 23 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் ஆகிய 3 நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஹார்ட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இதில் தட்டெறிதலில் 43.61 மீட்டர் தூரத்திற்கு தட்டை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை அவர் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யாழ். வல்வெட்டிதுறை, பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வீரர் ஸ்ரீதரன் ஐங்கரன், புதன்கிழமை நடைபெற்ற 16 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் 27.45 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும், வவுனியா நெலுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வீரர் கே. சுபிஷ்கரன் 18 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் 32.37 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரி வீரர் ஜெயமோகன் விஷ்ணுப்பிரியன், 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் 29.13 மீட்டரைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

தேவமதுமிதனுக்கு முதல் தங்கம்

திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன், புதன்கிழமை நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் 39.56 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். முன்னதாக, போட்டிகளின் முதல் நாள் நடைபெற்ற ஆண்களுக்கான குண்டெறிதலில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிஷாந்தனுக்கு வெண்கலம்

20 வயதின்கீழ் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குபற்றிய பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி வீரர் ஏபி. கிரிஷாந்தன் 14.60 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<