இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் இணையும் மஹேல ஜயவர்தன

1234

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தன ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக  (Consultant Coach) நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த கொழும்பு ஸ்டார்ஸ்

இதன்படி மஹேல ஜயவர்தனவின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக  இருக்கும் காலப்பகுதியில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் பயிற்றுவிப்பு ஆலோசகராக  இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் சபையின் உயர்செயற்திறன் நிலையத்தில் (High Performance Center) வீரர்களுக்கு திட்ட ரீதியான ஆதரவு (Strategic Support) வழங்குவதிலும் முன்னின்று செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தான் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக  மாறியிருக்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் மஹேல ஜயவர்தன இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“தேசிய (கிரிக்கெட்) அணியின் பயிற்சியாளர்களுக்கும், அணி ஆதரவு  உறுப்பினர்களுக்கும் (Support Staff) திட்ட ரீதியிலும், தயார்படுத்தல்களிலும் ஆதரவு வழங்குவது அடுத்த வருடத்தில் எனது முக்கிய பொறுப்பாக இருக்கும்.”

மஹேல ஜயவர்தனவின் நியமனம், இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகக்குழு ஆகியவை இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர்  T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயற்பட்டிருந்ததோடு, அடுத்த ஆண்டு இளையோர் உலகக் கிண்ணத்தில் ஆடவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் இலங்கையர்

இதேநேரம், லீக் கிரிக்கெட் தொடர்களில் ஆடும் அணிகளான மும்பை இந்தியன்ஸ், செளத்தர்ன் பிரேவ்ஸ் போன்ற அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் மஹேல ஜயவர்தன இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மிக்கி ஆத்தர் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<