நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜயசூரியவே செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>Zim Afro T10 தொடரில் விளையாடவுள்ள 12 இலங்கை வீரர்கள்!<<
தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.
அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் போதும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜயசூரியவே செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி சகலதுறைவீரரான சனத் ஜயசூரிய, T20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் கிறிஸ் சில்வர்வூட் பதவி விலகியதனை அடுத்து இந்திய தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார்.
விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையில் சனத் ஜயசூரிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மாத்திரம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையிலையே தற்போது அவரின் பதவிக்காலம் நியூசிலாந்து சுற்றுத் தொடரிலும் நீடிக்கப்பட்டிருக்கின்றது.
சனத் ஜயசூரிய ஆளுகையிலான இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை 2-1 எனப் பறிகொடுத்த போதிலும், குறிப்பிட்ட தொடரில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றி அசத்தலாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<