பங்களாதேஷுக்காக மொமினுல், ரஹீம் முதல் நாளில் சாதனை இணைப்பாட்டம்

970
Sri Lanka vs Bangladesh
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்துடன் (236) பங்களாதேஷ் அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

[rev_slider LOLC]

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அங்கு நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து பங்களாதேஷ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. தொடரின் முதல் போட்டி சிட்டகொங்  நகரின் ஷாஹூர் அஹ்மட் செளத்ரி மைதானத்தில் இன்று (31)  ஆரம்பமாகியிருந்தது.

நடைபெற்று முடிந்த முக்கோண ஒரு நாள் தொடரில் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் காயமுற்றிருந்ததை தொடர்ந்து இப்போட்டியில் பங்களாதேஷை வழிநடாத்த நியமிக்கப்பட்டிருந்த மஹ்மதுல்லா இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இலங்கையின் இறுதி இரண்டு டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் அணிக்குள் உள்வாங்கப்பட்டிராத  வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவிற்கு இன்றைய போட்டிக்கான இலங்கை குழாத்தில்  வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, பங்களாதேஷ் அணி சுழல் வீரரான சுன்சமுல் இஸ்லாமை இந்த ஆட்டம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்திருந்தது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு ஏற்ப பங்களாதேஷ் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான தமிம் இக்பால் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோருடன் தொடங்கியிருந்தது.

ஒரு நாள் போட்டிகள் போன்று ஓட்டங்கள் சேர்த்து பங்களாதேஷ் அணிக்கு சிறந்த துவக்கம்  ஒன்றினை தந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான தமிம் இக்பாலினை, சுழல் வீரரான தில்ருவான் பெரேரா எதிரணியின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்தார். ஆட்டமிழக்கும் போது தமிம் 53 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து ஏனைய ஆரம்ப வீரர் இம்ருல் கைஸ் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த மொமினுல் ஹக்குடன் சேர்ந்து பெறுமதியான இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் (48) ஓன்றுடன் 40 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் சந்தகனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டோடு போட்டியின் மதிய போசண இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது.

மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் புதிய துடுப்பாட்ட வீரராக முஷ்பிகுர் ரஹீம் மற்றும் களத்தில் நின்ற மொமினுல் ஹக் ஆகியோர் அதிரடி கலந்த நிதானத்தோடு மூன்றாம் விக்கெட்டுக்காக வலுவான இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப தொடங்கினர்.

இந்த இணைப்பாட்டத்துக்கு மொமினுல் ஹக் தனது 5ஆவது டெஸ்ட் சதத்தின் மூலம் நங்கூரம் போட முதல் நாளின் தேநீர் இடைவேளையை வெற்றிகரமாக பங்களாதேஷ் அணி எடுத்துக் கொண்டது.  

தேநீர் இடைவேளையின் பின்னர் ரஹீமும்,மொமினுல் ஹக்கும் தொடர்ச்சியாக பெறப்பட்ட ஓட்டங்கள் மூலம் பங்களாதேஷ் அணிக்காக மூன்றாம் விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினை (157) தாண்டி புதிய மைல்கல் ஒன்றினை நிலைநாட்டினர். இந்த இணைப்பாட்டத்தின் போது பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளரான ரஹீம் தனது 29 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பலமான முறையில் கட்டியெழுப்பட்டிருந்த இவர்களின் இணைப்பாட்டத்தினை தகர்ப்பது இலங்கை அணிக்கு மிகவும் சிரமமாக அமைந்திருந்தது. இரண்டு வீரர்களும் தொடர்ந்து இரட்டைச்சத இணைப்பாட்டத்தினை தாண்டினர். இதன்போது, தனிநபராக மொமினுல் ஹக் 150 ஓட்டங்களினை கடந்திருந்தார்.

இன்றைய போட்டியின் 80ஆவது ஓவருக்கு பின்னர் எடுக்கப்பட்ட புதிய பந்தின் மூலம் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு நெருக்கடியாக அமைந்த இந்த இணைப்பாட்டத்தினை இறுதியில் முஷ்பிகுர் ரஹீமின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த ரஹீமுக்கு துரதிஷ்டவசமாக சதத்தினை பூர்த்தி செய்ய முடியாமல் போயிருந்தது.  

236 ஓட்டங்கள் வரையில் நீடித்த பங்களாதேஷின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை நிறைவு செய்த லக்மால், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த லிடன் தாசினையும் எந்தவித ஓட்டமும் பெறவிடாது அடுத்த பந்தில் போல்ட் செய்திருந்தார். முதல் நாளின் இறுதி நேரத்தில் துரிதகதியில் பறிபோயிருந்த இந்த இரண்டு விக்கெட்டுக்களுமே இலங்கை அணிக்கு ஆறுதல் தந்திருந்தது.

இந்த விக்கெட்டுக்களை பறிகொடுத்த காரணத்தினால் ஒரு சிறிய தடுமாற்றத்தை பங்களாதேஷ் உணர்ந்தது. இதன் காரணமாக புதிய துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் மஹ்மதுல்லா, மொமினுல் ஹக் ஆகியோர் தொடர்ந்து பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்க்க தொடங்கினர்.

இவர்களின் சிறிய இணைப்பாட்டத்தோடு போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவை எட்டிக் கொண்டது. போட்டியின் முதல் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 370 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில்  சிறந்த நிலையில் காணப்பட்டிருந்தது.

களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், மஹ்மதுல்லா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

இலங்கை அணியின் இன்றைய நாள் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகன் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்