ஒருநாள் உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் மாற்றம்

ICC ODI World Cup 2023

164

ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஹெரி புரூக் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  

ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு, பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன 

இதனிடையே, இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு அணியும் இம்மாதம் 28ஆம் திகதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட குழாத்தை அறிவிக்க வேண்டும். அதன்படி இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாட உள்ள அணி விபரங்களை அறிவித்துவிட்டன 

அந்த வரிசையில் இங்கிலாந்தும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட உத்தேச குழாத்தை அண்மையில் வெளியிட்டிருந்த போதிலும் இறுதிக் குழாம் நேற்று (18) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

அதில் ஏற்கனவே அறிவித்தபடி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ், உலகக் கிண்ணத் தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். முதுகு வலியால் அவதிப்படும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய்க்குப் பதிலாக ஹெரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய புரூக் 68 பந்துகளில் 37 ஓட்டங்கள் மட்டும்தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதன்படி, உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஜேசன் ரோய் (33 வயது) நீக்கப்பட்டதன் மூலம், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் 

அதேநேரம், நியூசிலாந்துடளான ஒருநாள் தொடரில் ஜேசன் ரோயின் இடத்துக்குப் போட்டியாக ஜொனி பெயார்ஸ்டோவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய டாவிட் மலான் மூன்று போட்டிகளில் 92.33 சராசரியுடன் 277 ஓட்டங்களை எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம், உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் தனது இடத்தை மலான் உறுதி செய்தார். 

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோவ், ஆடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். 

அதேசமயம், காயம் காரணமாக ஜொப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியின் மேலதிக வீரராக ஜொப்ரா ஆர்ச்சர் பயணிப்பார் என்று அந்த அணியின் முன்னாள் வீரரும் தேர்வு குழு தலைவருமான லுக் ரைட் தெரிவித்துள்ளார் 

இதேவேளை, நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி, அஹமதாபாத்தில் ஆரம்பமாகும் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது 

உலகக் கிண்ண இங்கிலாந்து குழாம்  

ஜோஸ் பட்லர் (தலைவர்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜொனி பெயார்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன், டாவிட் மலான், ஆடில் ரஷித், ஜோ ரூட், ஹெரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<