உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ICC Men's Cricket World Cup 2023

57
ICC Men's Cricket World Cup 2023

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ICC இன் 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில், ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்க வேண்டும் என்று ICC அறிவித்தது.

இதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்துள்ள நிலையில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கவுள்ள 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று (13) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான நவீன் உல் ஹக் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல, தற்போது நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ணத தொடரில் ஆடி திறமைகளை வெளிப்படுத்திய சகலறை வீரர் குல்பதீன் நைப் மற்றும் ஷராபுதின் அஷ்ரப் மற்றும்  இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய பரீத் அஹ்மட் மலிக் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்த 4 வீரர்கள் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறவில்லை.

அத்துடன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான், மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மட் 4 சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். வேகப் பந்துவீச்சைப் பொறுத்தவரை நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் ஆகியோர் பலம் சேர்க்கவுள்ளனர்.

இதில் காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுளளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியில் பங்ளாதேஷ் அணியை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி தரம்சாலாவில் எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரம்:

ஹஷ்மதுல்லா ஷாஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), நஜிபுல்லா ஸத்ரான், ரஷித் கான், இக்ரம் அலிகில், மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, நூர் அஹ்மட், அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய்.

மாற்று வீரர்கள்: குல்பதீன் நைப், ஷராபுதின் அஷ்ரப் மற்றும் பரீத் அஹ்மட் மலிக்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<