இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார்

975

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், இனிவரும் காலங்களில் பந்துவீச மாட்டார் எனவும், சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கிரஹம் லெப்ரோய் வழங்கிய விசேட செவ்வியில், அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேநேரம், மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர்

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் …

அதிலும் குறிப்பாக, மெதிவ்ஸ் தொடர்ந்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்றார். இதனால் முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் அவர் தவறவிடுகின்றார். இதனைக் கருத்திக் கொண்டு மெதிவ்ஸ், இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார். மாறாக, இனிவரும் காலங்களில் மெதிவ்ஸ் முழுநேர துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செயற்படுவார் என லெப்ரொய் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் கண்டி அணியின் தலைவராக இலங்கை ஒரு நாள் மற்றும் T20 அணிகளின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டார். எனினும், மெதிவ்ஸின் உபாதை பூரணமாக குணமடையாத காரணத்தினால் முதல் 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான 3ஆவதும், இறுதியுமான போட்டியில் மெதிவ்ஸ் கண்டி அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக அதிகளவான போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ், கடந்த 2 வருடங்களாக அடிக்கடி ஏற்படுகின்ற உபாதைகள் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன் காரணமாக தனது தலைமைப் பதவியையும் மெதிவ்ஸுக்கு இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட சந்திக்க ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மெதிவ்ஸ், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான அணித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து பங்களாதேஷில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேயுடனான போட்டியின் போது மெதிவ்ஸின் தொடை எலும்பு பகுதியில் மீண்டும் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் எஞ்சிய அனைத்து போட்டிகளிலிருந்தும் அவர் விலகிக்கொண்டார். இதன்பிறகு கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு T20 தொடரிலும் அவருக்கு விளையாட முடியாமல் போனது.

ஏற்கனவே கடந்த வருடம் ஏற்பட்ட உபாதைகளின் பின்னர், அவர் அணிக்கு திரும்பியவுடன் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் நான்காம் இடத்தில் நிரத்தரமாக ஆடும் வீரராக மெதிவ்ஸ் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், தொடர் உபாதைகள் அவருக்கு அவ்வாறு நிரந்தரமாக அணியில் இடத்தைக் கொடுப்பதற்கு தடையாக இருந்தது.

எது எவ்வாறாயினும், எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்கேற்பாரா என்பது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீர்மானிக்கப்படும் என தேர்வுக் குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…