விறுவிறுப்புடன் ஆரம்பித்த ஜப்னா வொலிபோல் லீக்!

72
JVL

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஏல முறையில் வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டு முதன்முறையாக நடத்தப்படும் ஜப்னா வொலிபோல் லீக்கின் (Jaffna Volleyball League) முதல் நாள் (21) நான்கு போட்டிகள் நடைபெற்றன.

தொடரின் முதல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகியிருந்தது. நீர்வை பசங்க மற்றும் சங்கானை மக்களொன்றிய செலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டியில், 3-2 என்ற செட்கள் கணக்கில் நீர்வை பசங்க அணி த்ரில் வெற்றிபெற்றுக்கொண்டது.

ஜப்னா வொலிபோல் லீக்கின் போட்டி அட்டவணை வெளியானது!

அரியாலை சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதல் செட்டை நீர்வை பசங்க அணி 25-21 என கைப்பற்றியது. பதிலடி கொடுத்த சங்கானை அணி 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் 2வது செட்டை தம்வசப்படுத்தியது. 

தொடர்ந்து மூன்றாவது செட்டை நீர்வை பசங்க அணி 25-19 என கைப்பற்ற, நான்காவது செட்டை 25-20 என சங்கானை அணி கைப்பற்றியது. இறுதியாக, வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டை 20-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய நீர்வை பசங்க அணி, தொடரின் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இந்தப்போட்டியின் சிறந்த வீரராக நீர்வை பசங்க அணியின் மதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணியை எதிர்கொண்ட ரைசிங் ஐலண்ட்ஸ் அணி, 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் இலகுவாக வெற்றிக்கொண்டது. 

போட்டியின் முதல் செட்டை 25-23 எனவும், அடுத்த இரண்டு செட்களை முறையே 25-23 மற்றும் 26-24 என வெற்றிக்கொண்டு, முதல் வெற்றியை ரைசிங் ஐலண்ட்ஸ் பதிவுசெய்தது. இந்தப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக புவிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

அதேநேரம், தொடரில் மூன்றாவது போட்டி மீண்டும் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் மற்றும் சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்வேலி அணிகள் மோதிய இந்தப்போட்டியில், சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் முதல் இரண்டு செட்களையும் முறையே 25-15 மற்றும் 25-17 என இலகுவாக வெற்றிக்கொண்டது.

பின்னர் தங்களுடைய தவறுகளை திருத்திக்கொண்டு விளையாடிய ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி 25-18 மற்றும் 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்த இரண்டு செட்களை வெற்றியீட்டி போட்டியை சமப்படுத்தியது. எனினும், மீண்டும் ஆதிக்கம் செலுத்திய சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அணி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதி செட்டை கைப்பற்றி போட்டியை வெற்றிக்கொண்டது. போட்டி ஆட்டநாயகனாக ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியின் அசோக் தெரிவுசெய்யப்பட்டார்.

முதல் தினம் நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் அரியாலை கில்லாடி 100 அணியை எதிர்கொண்ட, வல்வையூர் வொலி வொரியர்ஸ் அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் இரண்டு செட்களை 25-11 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்ட வல்வையூர் வொலி வொரியர்ஸ் அணி, அடுத்த இரண்டு செட்களையும் 21-25 மற்றும் 21-25 என இழந்தது. எனினும், இறுதி செட்டை 15-08 என்ற புள்ளிகள் கணக்கில் வல்வையூர் வொலி வொரியர்ஸ் அணி வெற்றிக்கொண்டு போட்டியை தம்வசப்படுத்தியது. போட்டியின் ஆட்டநாயகனாக    வல்வையூர் வொலி வொரியர்ஸ் அணியின் செல்வதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளின் அட்டவணை

JVL

 மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க…