தேசிய பராலிம்பிக்கில் இலங்கை வீரரின் உலக சாதனையை அங்கீகரிக்க மறுப்பு

171

தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் 18ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதலில் 62.11 மீற்றர் தூரத்தை எறிந்த இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த சமிந்த சம்பத் ஹெட்டியாரச்சி, புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.

எனினும், குறித்த போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காத காரணத்தால் அவர் எறிந்த தூரத்தை உலக சாதனையாக அங்கீகரிக்க முடியாதென தேசிய பரா ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் ஜுலை 20இல் ஆரம்பம்

டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் பூரண …

இந்தப் போட்டித் தொடர் டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் கடந்த வார இறுதியில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிக்காக நடத்தப்படுகின்ற வருடத்தின் மிகப் பெரிய மெய்வல்லுனர் போட்டித் தொடராக அமைந்துள்ள இம்முறை தேசிய பரா மெய்வல்லுனரில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 40 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 800இற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், போட்டிகளின் முதல் நாளான நேற்றுமுன்தினம் (21) நடைபெற்ற ஆண்களுக்கான எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் 62.11 மீற்றர் தூரத்தை எறிந்த சமிந்த சம்பத் ஹெட்டியாரச்சி தங்கப் பதக்கம் வென்றார். இந்த தூரம் உலக பரா மெய்வல்லுனர் சாதனையாக இருந்தாலும், அதனை தேசிய பரா ஒலிம்பிக் சங்கம் அங்கீகரிக்கவில்லை.

சீனா மாற்றுத்திறனாளி காஓ மிங்ஜீ கடந்த 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 59.82 மீற்றர் தூரத்தை எறிந்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

எனவே, குறித்த தூரத்தைவிட 2.29 மீற்றர் அதிகமாக சமிந்த ஹெட்டியாரச்சி வீசியிருந்தார். எனினும், சுகததாஸ அரங்கில் நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் பங்குபற்றாததாலும், இந்தப் போட்டித் தொடருக்கு உலக பரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினாலும் அவரது தூரப் பதிவை உலக சாதனையாக ஏற்றுக் கொள்ள முடியாது என பரா ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷிய பகிரங்க குத்துச்சண்டையில் ஹன்சிகாவுக்கு வெண்கலப் பதக்கம்

இந்தோனேஷியாவின் மனாடோவிஸில் நடைபெற்ற …

யுத்தம் காரணமாக 2008ஆம் ஆண்டு இடதுகால் முழங்காலுக்கு கீழே இழந்து ஓய்வு பெற்ற இரானுவ வீரராக உள்ள சமிந்த ஹெட்டியாரச்சி, செயற்ககை காலுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றார்.

எனினும், இம்முறை தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் திறந்த பிரிவுக்கான அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருது சமிந்தவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2016இல் நடைபெற்ற றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவைச் சேர்ந்த தினேஷ் பிரயன்த ஹேரத், மாற்றுத்திறனாளிகளுக்கான எவ் 46 ஈட்டி எறிதலில் 62.39 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய பரா குழாத்துக்கு வீரர்களை இணைத்துக் கொள்வதற்காக தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய தினேஷ், எவ் 46 பிரிவு ஈட்டி எறிதலில் 63.70 மீற்றர் தூரத்தை எறிந்து உலகின் 2ஆவது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து, உலக சாதனை அடைவுமட்டத்தை அண்மித்திருந்தார்.

Photos: The National Para Athletics Championship 2018 powered by Dialog | Day 2

Photos: The National Para Athletics Championship 2018…

எனினும், இம்முறை அதை முறியடிப்பதற்கு அவரால் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கைகூடாமல் போனது. இப் போட்டியில் ஆறு சுற்றுக்களிலும் 58.99, 62.39, 59.68, 58.16, 60.60 மற்றும் 59.05 ஆகிய மீற்றர் தூரங்களை தினேஷ் வீசியிருந்தார்.

ஆனால், குறித்த பிரிவில் இந்திய வீரர் தேவேந்திர சிங்கினால் 2016 றியோ பரா ஒலிம்பிக்கில் நிலைநாட்டப்பட்ட 63.97 மீற்றர் தூரமே தற்போது உலக சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இம்முறை தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சிற்றாயுத விளையாட்டுக் கழகம் 16 தங்கப் பதக்கங்களை வென்று ஆண்கள் பிரிவு சம்பியனாகத் தெரிவாகியது. இதில் இரண்டாவது இடத்தை இலங்கை இராணுவத்தின் விஜயபாகு சிற்றாயுத விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.

இதேநேரம், பெண்கள் பிரிவில் 12 தங்கப் பதக்கங்களுடன் புனர்வாழ்வு லங்கா விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவாகியதுடன், வெல்லஸ்ஸ விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Photos : The National Para Athletics Championship 2018 powered by Dialog | Day 1

Photos The National Para Athletics Championship 2018 …

இந்த நிலையில் திறந்த பிரிவுக்காக நடைபெற்ற போட்டிகளில் 16 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ காலாற் படை சிற்றாயுத விளையாட்டுக் கழகம் ஆண்கள் பிரிவு சம்பியனாகவும், 12 தங்கப் பதக்கங்களை வென்ற ரிஹெப் லங்கா விளையாட்டுக் கழகம் பெண்கள் பிரிவு சம்பியனாகவும் தெரிவாகியிருந்தன.

அத்துடன், கனிஷ்ட பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சம்பியன் பட்டங்களை வெல்லஸ்ஸ விளையாட்டுக் கழகமும், குறித்த பிரிவில் இரண்டாவது இடங்களை மேல் மாகாண விசேட தேவையுடைய கல்வி வலய விளையாட்டுக் கழகமும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இம்முறை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் அடுத்த மாதம் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழாவுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுக் கொண்டனர்.

  • ஆண்கள் பிரிவு சம்பியன் கிண்ணத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி வழங்கிய போது