மழையினால் தடைப்பட்ட யாழ்ப்பாண – தோமியன் மாஸ்டர்ஸ் அணிகளின் மோதல்

158
Jaffna Masters vs Thomians Masters

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் மற்றும் தோமியன் மாஸ்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்ற கண்காட்சி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் வீரர்கள் ஒழுங்கு செய்த இந்த கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (5) கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.

கிரிக்கெட் மோதலுக்காக கொழும்பு வரும் யாழ் மாஸ்டர்ஸ் அணி

போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே மழையின் குறுக்கீடு காணப்பட்டதன் காரணமாக ஆட்டம் அணிக்கு 25 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய தோமியன் மாஸ்டர்ஸ் அணி 25 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைக் குவித்தது.

தோமியன் மாஸ்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக நளின் ஜயதிலக்க 25 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நல்லையா தேவராஜன் மற்றும் ஜெகன் பழனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 124 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி 19 ஓவர்கள் துடுப்பாடிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் கைவிடப்பட்டது.

ஆட்டம் கைவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் S. கிருபானந்தன் 35 ஓட்டங்களையும், K. செல்வராஜா 24 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.

மறுமுனையில் தோமியன் மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் இஷாக் சாப்தீன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டிரான் தேனபது 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பங்களாதேஷ் தொடருக்காக பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

அடுத்ததாக இந்த கண்காட்சி ஒருநாள் தொடரின் அடுத்த போட்டி நாளை (6) இதே மைதானத்தில் யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் மற்றும் இணைப்பு மாஸ்டர்ஸ் அணிகள் இடையில் இடம்பெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

தோமியன் மாஸ்டர்ஸ் – 123/9 (25) – நளின் ஜயத்திலக்க 25, ஜெகன் பழனி 17/2, நல்லையா தேவராஜன் 23/2

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் – 106/6 (19) – S. கிருபானந்தன் 35, K. செல்வராஜா 24, இஷாக் சாப்தீன் 33/2, டிரான் தேனபது 21/2

முடிவு – போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<