ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் கிரிக்கெட் அணியில் இலங்கை வீராங்கனை

323

நான்கு வருடங்களுக்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான சமனி செனவிரத்ன, தற்போது ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் அணிக்காக ஒப்பந்தமாகியிருப்பதன் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

ஹேரத், லக்மால் ஆகியோர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணியானது…

ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் அணி வருகின்ற ஜூலை மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் (Women’s World Twenty20)  பங்கேற்கின்றது. இப்போட்டிகளுக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் மகளிர் அணிக் குழாத்தில் சமனியின் பெயர் இடம்பெற்றதன் மூலமே, அவர் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் வேறொரு நாட்டுக்காக விளையாட வந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

சகலதுறை வீராங்கனையான சமனி, ஐம்பது ஓவர்கள் கொண்ட மகளிர் உலகக் கிண்ணங்கள் ஐந்திலும், இரண்டு உலக T20 சம்பியன்ஷிப் தொடர்களிலும் இலங்கை மகளிர் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்.

இவை தவிர, இரண்டு தசாப்களுக்கு மேலாக இலங்கை மகளிர் அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் சதம் கடந்த ஒரேயொரு வீராங்கனையாக சமனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த டெஸ்ட் சதத்தினை (105)  சமனி 1998 இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக பெற்றிருந்தார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து சமனி ஓய்வினை அறிவித்திருந்தாலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் தற்போது இடம்பெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டியதே அவரை ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் அணிக்குள் உள்வாங்க காரணமாகவிருக்கின்றது.

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு என்ன நடந்தது?

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கை அதி சிறப்பான களத்தடுப்பைக் (Fielding)…..

கடந்த வாரம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்று முடிந்த தேசிய மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் அபுதாபி கிரிக்கெட் கழகத்தின் தலைவியாக செயற்பட்டிருந்த சமனி, குறித்த தொடரில் 45 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 225 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதனால், சமனியின் தரப்பு இத்தொடரில் சம்பியன் பட்டத்தினையும் வென்றிருந்தது.

ஷயேட் கிரிக்கெட் மைதானத்தில் முடிந்த இத் தொடரின் இறுதிப் போட்டியில் சமனியின் அபுதாபி அணி, டெஸர்ட் கப்ஸ் அணியினை எதிர் கொண்டிருந்தது. இந்த போட்டியில் சமனி வெறும் 56 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 86 ஓட்டங்களினை விளாசி ஆட்ட நாயகி விருதையும் வென்றிருந்தார்.

இந்த ஆண்டுடன் சமனிக்கு 40 வயதாகின்றது. எனினும், இப்படியாக அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இன்னும் தன்னுள் கிரிக்கெட் உயிருடன் இருக்கின்றது என்பதை காட்டியிருக்கின்றார்.

தன்னால் 40 வயதிலும் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால் இலங்கையின் மகளிர் அணிக்கே ஆட முடியுமே? என்று சமனியிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த அவர் “ இப்படியான வாய்ப்புக்கள் (இலங்கையில்) குறைவு “ என்றார்.

2014 ஆம் ஆண்டு இலங்கை மகளிர் அணியில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னர், அபுதாபிக்கு வந்த சமனி அங்கே ஷயேட் கிரிக்கெட் அகடமியின் பயிற்றுவிப்பாளராகவும், உடற்தகுதி பயிற்சி வழங்குனராகவும் பணியாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சமனி தனது வேலைதவிர்ந்த நேரங்களில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்தும் ஈடுபாடு காட்டி வந்திருக்கின்றார்.

இப்படியாக அவர் இருந்து வந்தது அவருக்கு இன்னொரு நாட்டின் கிரிக்கெட் அணிக்கு விளையாடும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனினும், சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் விளையாடுவது பற்றி  சமனி ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

“ நான் சொந்தக் காரணங்கள் சிலவற்றை கருதியே சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்திருந்தேன். அதோடு, நான் இலங்கையில் இருந்து வெளியேறும் போது நான் சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதை நினைத்துப்பார்த்திருக்கவில்லை. ஆனால், இங்கே நான் இன்னொரு நாட்டின் சீருடை அணிந்து மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவிருக்கின்றேன். “

“ ஐக்கிய அரபு இராட்சிய அணிக்காக தெரிவு செய்யப்பட்டது எனக்கு பெருமையாக இருக்கின்றது. கிரிக்கெட் எனது வாழ்வில் எப்போதும் இருக்கும். “ என சமனி செனவிரத்ன குறிப்பிட்டிருந்தார்.

சமனி செனவிரத்ன இலங்கையின் அநுராதபுர பிரதேசத்தினை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமனி தவிர, மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் அணியில் இலங்கையினை சேர்ந்த இன்னும் மூன்று வீராங்கனைகள் காணப்படுகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி

ஹூமைரா தஸ்னிம் (அணித்தலைவி), சமனி செனவிரத்ன, சுபா சிரினிவாஷன், நிசா அலி, உதேனி குருப்பாராய்ச்சி, சயா முகல், ரூபா நாகராஜ், எசா ஒசா, இஷானி செனவிரத்ன, ஹீனா ஹொட்சந்தனி, கவீஷா குமாரி, ஜூடித் க்ளிட்டஸ், சவி பட், நமிதா டீ.சூஸா

கிரிக்கெட் வீடியோக்களைப் பார்வையிட