115வது வடக்கின் பெரும் சமரை வென்றது சென். ஜோன்ஸ் கல்லூரி

115th Battle of the North 2022

378

யாழ். மத்தியக் கல்லூரி மற்றும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரிகள் மோதிய 115வது வடக்கின் பெரும் சமரில் கமலபாலன் சபேசனின் சதம் மற்றும் ஜெயச்சந்திரன் அஸ்நாத்தின் 6 விக்கெட் குவிப்புடன் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் நிறைவில் 171 ஓட்டங்களுடன் முன்னிலையில் களமிறங்கியிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணிசார்பில் கமலபாலன் சபேசன் இன்றைய தினம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

>>விதுசன், அஸ்நாத்தின் அபார பந்துவீச்சுடன் முன்னேறும் சென். ஜோன்ஸ் கல்லூரி

நேற்றைய தினம் 45 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்று களமிறங்கியிருந்த இவர் மிகவும் அற்புதமாக ஆடியிருந்தார். இவர் மதியபோசன இடைவேளைக்கு முன்னர் தன்னுடைய சதத்தை விளாசியிருந்ததுடன், 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகளுடன் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இவருக்கு அடுத்தப்படியாக இன்றைய தினம் அணித்தலைவர் அண்டன் அபிஷேக் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 220 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சில் நியூட்டன் 3 விக்கெட்டுகளையும், கௌதம் மற்றும் கஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மதியபோசன இடைவேளைக்கு சற்றுமுன்னர் இன்னிங்ஸ் நிறைவுசெய்யப்பட, 263 என்ற பாரிய இலக்கை நோக்கி யாழ்.மத்தியக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. துரதிஷ்டவசமாக தங்களுடைய முதல் 2 விக்கெட்டுகளையும் வெறும் 4 ஓட்டங்களுக்கு இழந்து மத்தியக் கல்லூரி அணி தடுமாறத்தொடங்கியது.

>>பந்துவீச்சாளர்களின் அபாரத்துடன் வடக்கின் பெரும் சமரை ஆரம்பித்த யாழ். மத்தி!

இதனைத்தொடர்ந்து ஆட்டத்தில் மதியபோசன இடைவேளை வழங்கப்பட மீண்டும் போட்டி ஆரம்பமானது. எனினும், திலீப்குமார் கௌதம் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற, 18 ஓட்டங்களுக்கு மத்தியக் கல்லூரியின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

எனினும் ஸ்ரீதரன் சாரங்கன் மற்றும் ஆனந்தன் கஜன் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை மேற்கொண்டு இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். இவர்களது ஆட்டம் மத்தியக் கல்லூரியை போட்டியின் சமனிலையை நோக்கி அழைத்துச்செல்லும் என்ற எதிர்பார்ப்பு அணி மத்தியில் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், கஜன் 53 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அஸ்நாத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து சாரங்கன் ஸ்ரீதரன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். இந்த இருவரின் ஆட்டமிழப்புகளை தொடர்ந்து மதீஷ்வரன் சன்சஜன் 27 ஓட்டங்களையும், சகாதேவன் சயந்தன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், 62.3 ஓவர்கள் நிறைவில் மத்தியக் கல்லூரி அணி 163 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சை பொருத்தவரை முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்நாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்ற, விதுசன் மற்றும் கஜகர்ணன் ஆகியோர் தலா 2

விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொத்தமாக விதுசன் மற்றும் அஸ்நாத் ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளை இந்த போட்டியில் வீழ்த்தியிருந்தனர்.

வடக்கின் பெரும் சமரின் வரலாற்றை பொருத்தவரை, இம்முறை வெற்றிபெற்றுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரி தங்களுடைய 38வது வெற்றியை இம்முறை பதிவுசெய்துள்ளதுடன், மத்தியக் கல்லூரி அணி 28 வெற்றிகளை இதுவரை பெற்றுள்ளது. இதேவேளை, சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி கடந்தமுறை கிண்ணத்தை வெற்றிக்கொண்டு, நடப்பு சம்பியனாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 167/10 (84.1), கரிஷன் 41, அபிஷேக் 40, கவிதர்ஷன் 41/3, விதுசன் 13/3, நியூட்டன் 50/1, கௌதம் 27/1

யாழ். மத்தியக் கல்லூரி –125/10 (45), சாரங்கன் 41, அஜய் 28*, விதுசன் 48/6, அஸ்நாத் 46/4

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி (2வது இன்னிங்ஸ்) – 220/7d (46), சபேசன் 105, ஜெசில் 35, சுகேதன் 34, நியூட்டன் 64/3

யாழ். மத்தியக் கல்லூரி (2வது இன்னிங்ஸ்) –163/10 (62.3), கஜன் 53, சாரங்கன் 33, சன்சஜன் 27, ஜெயச்சந்திரன் அஸ்நாத் 70/6

முடிவு – யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<