அவுஸ்திரேலியாவின் மல்க்ரெவ் கழக தலைவரானார் டில்ஷான்

150

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இயங்கிவரும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழக அணியின் (Mulgrave Cricket Club) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ‘மல்க்ரேவ் கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திலகரட்ன டில்ஷான் எமது கழகத்துக்காக கடந்த வருடம் விளையாடியதுடன், எமது அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற பெரிதும் உதவியிருந்தார். இலங்கை உருவாக்கிய அதிசிறந்த வீரர்களில் டில்ஷானும் ஒருவராவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 40க்கு மேல் சராசரியை கொண்டுள்ள அவர் முன்னாள் தேசிய அணித் தலைவருமாவார் என தெரிவித்துள்ளது.

இதனிடையே மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட டில்ஷான்,

”மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்தின் முதல்நிலை அணியின் தலைவர் பதவியை ஏற்பதையிட்டு நான் பூரிப்படைகின்றேன். 2020-2021 கிரிக்கெட் பருவகாலத்தில் தலைவராக அணியை சிறப்பாக வழிநடத்த எதிர்பார்த்துள்ளேன். அதேபோன்று அடுத்துவரும் பருவகாலத்தில் அந்தக் கழக வீரர்களுடன் விளையாடவுள்ளேன்” என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2011-12 காலப்பகுதியில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட டில்ஷான், இந்தியாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்ததுடன், இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இலங்கை – இலங்கை லெஜண்ட்ஸ் இடையிலாக போட்டி வேண்டாம் – டில்ஷான்

115 வருடங்கள் பழைமையான மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்தில் இலங்கை வம்சாவளி வீரர்கள் பலர் விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் உள்ளூர் முதல்தரப் போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை வம்சாவளி வீரர்கள் 9 பேர் மல்க்ரேவ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடியிருந்தனர்.

இதில் நவீன் த சில்வா, திலகரட்ன டில்ஷான், ஜொனதன் பெர்னாந்து, ருவன் சம்பத், சமித் துஷ்மன்த, புத்திக மதுஷங்க, சந்தருவன் ரொட்றிகோ மற்றும் ஷிரான் ராஜகருணா உள்ளிட்ட வீரர்கள் அந்தக் கழகத்துக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…