KL ராகுலுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

203

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில், விக்கெட் காப்பாளர் இஷான் கிஷன் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான 17 பேர் கொண்ட பெட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா குழாம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு IPL தொடரில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியை வழிநடத்தி வந்த கேஎல் ராகுல், கடந்த முதலாம் திகதி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் களத்தடுப்பில் ஈடுப்பட்ட போது தொடைப் பகுதி காயத்துக்குள்ளானார்.

எனவே, கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், நடப்பு IPL தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் தொடரில் இருந்து அவர் விலகினார்.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் ராகுலுக்குப் பதிலாக இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

24 வயதான இஷான் கிஷன், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக T20i மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 49 முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 91 லிஸ்ட் A போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகின்ற அவர், நடப்பு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இடது தோள்பட்டை பகுதியில் காயமடைந்துள்ள இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதேபோல, கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் சிறிய காயம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும். அவரை கொல்கத்தா அணியின் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், பிசிசிஐ மருத்துவக் குழுவினர் கொல்கத்தா மருத்துவக் குழுவினருடன் அவரது முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து அவர்களுடன் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் மேலதிக வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விபரம்

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்).

மேலதிக வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<