பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் அதிரடியாக நீக்கம்

188
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழாத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைத்துவிட அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அசார் மஹ்மூத், துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேண்ட் பிளெவர் மற்றும் உடற்கூற்று நிபுணர் கிராண்ட் லூடன் உள்ளிட்டோரை தத்தமது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஹபீஸ் மற்றும் மலிக்கை புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான 2019 – 2021ம் ஆண்டு…

இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டாலும் நிகர புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி 5ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றத்துடனேயே வெளியேறியது. இதனால், பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனர்கள் முன்வைக்கப்பட்டன

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணியை கட்டமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். மறுபுறத்தில் உள்ளூர் கிரிக்கெட்டை வலுப்படுத்தி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் பதவிக்காலம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்

எனினும், மிக்கி ஆர்தரின் பதவிக் காலத்தில் பாகிஸ்தான் அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இவரது பயிற்றுவிப்பின் கீழ் 2017இல் பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதோடு, டி-20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.

‘நோ போல்’ பிடிப்பதை மூன்றாம் நாடுவரிடம் வழங்க ஐ.சி.சி. திட்டம்

பந்துவீச்சாளர்களின் முன் கால் “நோ போல்” பிடிக்கும் அதிகாரத்தை….

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக படுமோசமாக ஆடி தொடர்களை இழந்தது. மிக்கி ஆர்தரின் பயிற்றுவிப்பின் கீழ் பாகிஸ்தான் அணி 10 டெஸ்ட் போட்டிகளில் வென்று 17 போட்டிகளில் தோல்வி கண்டது. இதனால், .சி.சி டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், தனது பயிற்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், தனது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொடுத்தால் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியாக தன்னால் உருவாக்கமுடியும் என தற்போதைய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவித்திருந்தார்

மேலும், சர்பராஸ் அஹமட்டின் தலைமைத்துவத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாபர் அசாமும், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு சதாப் கானும் தலைவராக வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட விசேட கிரிக்கெட் குழு உறுப்பினர்கள் இதுதொடர்பில் ஆராய்ந்து சில பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் கையளித்துள்ளனர். அதில், பாகிஸ்தான் அணித் தலைவரை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர்கள் முன்வைத்துள்ளதாக கிரிக்கெட் சபை தலைவர் ஈசான் மணி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை….

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் மிக்கி ஆர்தரை நீடிக்கவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்பவில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (07) நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

அதேபோல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஏனைய பயிற்சியாளர்களையும் பதவிகளில் இருந்து விடுவிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது

இதன்படி, பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது

இதேவேளை, பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கைக்கு எதிராக ஒக்டோபரில் விளையாடவுள்ளது. .சி.சியின் டெஸ்ட் சம்பயின்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடைபெறவுள்ளதால் அந்த அணியில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல, 2 போட்டிகளைக் கொண்ட குறித்த போட்டித் தொடர் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எதுஎவ்வாறாயினும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன் பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்கள் குழாம் மற்றும் புதிய அணித் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க