டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய குழாம் அறிவிப்பு

179

இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணிக் குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியக் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தெரிவாகியிருக்கின்றது. இந்த நிலையில் இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

இந்த இறுதிப் போட்டிக்கு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தெரிவாகிய நிலையில், இறுதிப் போட்டிக்கான 17 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய பூர்வாங்க குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் 15 பேர் அடங்கிய குழாம் ரோஹிட் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸை வென்றது டெல்லி

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய குழாத்தில் முக்கிய உள்ளடக்கமாக அஜிங்கியா ரஹானே மாறியிருக்கின்றார். இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான அஜிங்கியா ரஹானே மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்துகை மற்றும் உபாதை என்பவற்றினை அடுத்து, கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடியிருக்கவில்லை.

எனினும் ராஞ்சி கிண்ணம் போன்ற உள்ளூர் தொடர்களில் வெளிப்படுத்திய ஆட்டம் மூலமாக அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய டெஸ்ட் குழாத்தில் இடம் பிடித்திருக்கின்றார். அத்துடன் ரஹானே இந்தப் பருவத்திற்கான IPL தொடரிலும் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை அறிவிக்கப்பட்டிருக்கும் குழாத்தில் அஜிங்கியா ரஹானே தவிர அணித்தலைவர் ரோஹிட் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், செட்டேஸ்வர் புஜாரா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முன்னணி துடுப்பாட்டவீரர்களாக காணப்படுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடன் ஆடியிருந்த கடைசி டெஸ்ட் தொடரான போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தில் பங்கெடுத்த துடுப்பாட்டவீரரான சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய குழாத்தில் இணைக்கப்படவில்லை. அதேநேரம் விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரரான இஷான் – கிஷானும் இந்திய டெஸ்ட் குழாத்தில் விளையாடும் வாய்ப்பினை இழக்கின்றார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஓரிரு இன்னிங்ஸ்களில் சிறு தடுமாற்றத்தினைக் காட்டிய போதும் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான கே.எஸ். பாரத் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ச்சியாக தனது இடத்தினை தக்க வைத்திருக்கின்றார்.

பொறுப்பான முறையில் துடுப்பாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி

பந்துவீச்சினை நோக்கும் போது இங்கிலாந்து ஆடுகள நிலைமைகளில் சிறப்பாக செயற்பட்ட சகலதுறைவீரரான சர்துல் தாக்கூர் வேகப்பந்துவீச்சாளராக இந்திய டெஸ்ட் குழாத்தில் இணைய, மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜய்தேவ் உனட்கட் ஆகியோர் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்க, சுழல்பந்துவீச்சுப் பொறுப்பு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் பிரதானமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய டெஸ்ட் குழாம்

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷார் பட்டேல், மொஹம்மட் சமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<