கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான் பதான்

88
Cricbuzz

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான இர்பான் பதான் இன்று (04) தனது 35ஆவது வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

1984ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்த இர்பான் பதான் கிரிக்கெட் விளையாட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டியதன் மூலம் 2000ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

வருடத்தின் முதல் வெற்றியை சுவைக்கப்போவது இலங்கையா? இந்தியாவா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…

இந்திய 15 வயதுக்குட்பட்டோர் அணி, 19 வயதுக்குட்பட்டோர் அணிகளில் சகலதுறை வீரராக கலக்கிய இர்பான் பதானுக்கு 2003ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அடிலெய்ட்டில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இர்பான் பதான் முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

டெஸ்ட் அறிமுகத்தை தொடர்ந்து 2004ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்வாண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூவகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடி வந்த இர்பான் பதான் அணியின் பல வெற்றிகளுக்கு பாங்காளராக திழந்துள்ளார். குறிப்பாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக்கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றுவதற்கு இறுதிப்போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி முக்கிய பங்கு வகித்ததுடன், அப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவாகியிருந்தார். 

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2006ஆம் ஆண்டு கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில் (சல்மான் பட், யூனுஸ் கான், மொஹம்மட் யூஸூப்) ஹெட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தி, இன்றுவரையில் டெஸ்ட் அரங்கில் முதல் ஓவரில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரேயொரு பந்துவீச்சாளராக இர்பான் பதான் திகழ்கின்றார். 

அது மாத்திரமல்லாது அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள வெஸ்டன் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அஷோஷியேசன் (WACA) மைதானத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரேயோரு ஆசிய வீரராகவும் இர்பான் பதான் காணப்படுகின்றார்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் ஆரம்ப பந்துவீச்சாளராகவும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் களமிறங்கிய மூன்று வீரர்களில் ஒருவராக இர்பான் பதான் திகழ்கின்றார். ஏனைய இரண்டு வீரர்களாக இலங்கையின் திலகரட்ன டில்ஷான் மற்றும் பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் திகழ்கின்றனர்.

இவ்வாறு கிரிக்கெட் வரலாற்றில் பல வித்தியாசமான சாதனைகளை புரிந்துவந்த சகலதுறை வீரரான இர்பான் பதானுக்கு, ஏனைய இளம் வீரர்களின் தொடர் வருகையின் காரணமாக தொடர்ந்தும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இர்பான் பதான் 2008ஆம் ஆண்டு இறுதியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இர்பான் பதான் துடுப்பாட்டத்தில் 1 சதம், 6 அரைச்சதங்களுடன் மொத்தமாக 1,105 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 2 பத்து விக்கெட்டுக்கள், 7 ஐந்து விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.  

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில்…

2004ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய இர்பான் பதான் துடுப்பாட்டத்தில் 5 அரைச்சதங்களுடன் மொத்தமாக 1,544 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 2 ஐந்து விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 173 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். 

2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் இர்பான் பதான் இறுதியாக டி20 சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். 24 டி20 சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்டத்தில் 172 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 28 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். 

சர்வதேச போட்டிகள் மாத்திரமல்லாது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரிலும் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி டெயார்டவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் பூனே சுப்பர்ஜெய்ன்ட்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளதுடன், இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

இவ்வாறு பல அணிகளுக்கான சர்வதேச ரீதியிலும், உள்நாட்டு ரீதியிலும் விளையாடியுள்ள இர்பான் பதான் தனது 35ஆவது வயதில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அடுத்த வாழ்க்கைக்கு தயாராகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சகேதரர்கள் வரிசையில் இர்பான் பதான் மற்றும் யூஸூப் பதான் ஆகியோர் முக்கிய இடம்வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<